7 Sept 2025

மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்.

SHARE

மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்.

கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் ஞாயிற்றுக்கிழமை(07.09.2025) நடைபெற்றது.

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் (18.08.2025)திங்கட்கிழமை இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இலங்கையின் வரலாற்று பதிகளில் ஒன்றான மண்டூர் கந்தசுவாமி ஆலயம் கந்தபுராணத்து காலத்தில் உருவான ஆலயமாக கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் உண்டான போரின்போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒருவேல் கதிர்காமத்திலும், ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக கர்ணபரம்பரைக் கதைகள் தெரிவிக்கின்றன. அதேபோன்ற சோழ பரம்பரையில் வந்த சீர்பாததேவியினால் கொண்டுவரப்பட்ட வேலை அவருடன் வந்த ஒருவர் எடுத்துவந்து இங்கு ஒழித்துவைத்து அதனை வேடர்கள் கண்டு வழிபட்டதாகவும் கூறப்படுகின்றது. 

கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய் கட்டி உத்சவம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இருபது தினங்கள் நடைபெற்ற இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெற்றன. 

பாரம்பரிய பூசைமுறைகளுடன் பாரம்பரியமான முறையிலேயே ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. 

இந்நிலையில் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஞாயிற்றுக் கிழமை (07.09.2025)ஆம் திகதி மட்டக்களப்பு மூங்கிலாற்று சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். 

தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அங்கு சிறுமிகள் ஆரார்த்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றபோது சிறுமிகள் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

 













SHARE

Author: verified_user

0 Comments: