14 Aug 2025

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளரினால் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக அப்பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடையம் தொடர்பில் ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பல ஊழல் மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதுடன் அதிகார துஸ்பிரயோகங்களையும் மேற்கொண்டு வருவதனை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 

1. 08.07.2025 அன்று 10 லோட் கழிவு மண் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டு அவரது காணியில்  பறிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய பணம் ரூபா 80000.00 தவிசாளரால் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டதாக அறிய முடிகின்றது. ஆனால் ஒரு மாதம் முடிந்தும் இன்றுவரை (06.08.2025) அது பிரதேச சபைக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் தவிசாளரினால் கையாடல் செய்யப்பட்டுள்ளது. 

2. 11.07.2025 அன்று ருபா 4500.00  பெறுமதியான 375 கிலோ சேதனப்பசளை போரதீவுப் பற்று பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.  குறித்த பணம் இன்றுவரை (06.08.2025) பிரதேச சபைக்கு செலுத்தப்படவில்லை. இப்பணத்தினையும் சபைக்கு செலுத்தாமல் தவிசாளர் கையாடல் செய்துள்ளார்.

 3. 31.07.2025 அன்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு ரூபா 6000.00 பெறுமதியான 500 கிலோ சேதனப்பசளை  வழங்கப்பட்டுள்ளது. குறித்த பணம் இன்றுவரை (06.08.2025) பிரதேச சபைக்கு செலுத்தப்படவில்லை. இப்பணத்தினையும் சபைக்கு செலுத்தாமல் தவிசாளர் கையாடல் செய்துள்ளார். 

4. தவிசாளர் அலுவலக லேன் குரோசர் வாகனத்தை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றார்;. 26.07.2025 மற்றும் 27.07.2025 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தனது கட்சி உறுப்பினர்களை ஏற்றிச் சென்றுள்ளார். 

5. 02,08.2025 மற்றும் 03,08.2025 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அலுவலக வாகனத்தில் தனது தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ளார். குறித்த வாகனத்தின் எரிபொருள் செலவு அதிகம் என்பதுடன் பராமரிப்பு செலவும் அதிகம். இருந்தபோதும் தனது தனிப்பட்ட மற்றும் கட்சியின் தேவைகளுக்காக நீண்ட தூர பயணங்களுக்கு இவ் வாகனத்தினைப் பயன்படுத்தி வருகின்றார். 

மேற்படி விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பணிவாக வேண்டிக் கொள்கின்றேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: