6 Mar 2026

தென்னிலங்கை தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை இல்லாமல் செய்வதற்காக திட்டம் தீட்டுகின்றார்கள் - சிறிநாத் எம்.பி.

SHARE

தென்னிலங்கை தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை இல்லாமல் செய்வதற்காக திட்டம் தீட்டுகின்றார்கள் - சிறிநாத் எம்.பி.

தென்னிலங்கை தேசிய அரசியலில்  இலங்கை நாட்டிலேயே தமிழ் மக்களுக்கு உரிமைகளை இல்லாமல் செய்வதற்காக அவர்கள் திட்டங்களை தீட்டிக்கொண்டு தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி எங்களுடைய எதிர்கால இருப்பை இல்லாது ஒழிப்பதற்கான பல சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் நிகழ்கால பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகள் தொடர்பான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு தமிழர் பண்பாட்டு உணர்வாளர்கள் அமைப்பினால் வி.ஆர்.மகேந்திரனின் தலைமையில் சனிக்கிழமை(28.02.2026) மட்டக்களப்பு திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு  எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல. கடந்த காலங்களில் இருந்த கட்சிகளும் நிகழ்காலத்தில் இருந்த இருக்கின்ற கட்சிகளும் எதிர் காலத்தில்  தென்னிலங்கையை ஆட்சி செய்யப் போகின்ற கட்சிகளுக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல்தான் இருக்கின்றன. தமிழ் தேசிய பரப்பினை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் தமிழ் மக்களை மேலும் சிறுபான்மையினர் ஆக்கிக் கொண்டு அவர்களுடைய அரசியல் உரிமைகளில் இருந்து சகல உரிமை விடயங்களையும் இல்லாமல் செய்வதுதான் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலாகும். இதற்கு எந்த சிங்கள பௌத்த தேசிய வாதம் விதிவிலக்கல்ல. என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். அதில் நாங்கள் அனுபவமும் பட்டிருக்கின்றோம். 

கடந்த காலங்களில் இருந்து எனது சாத்வீகப் போராட்டங்கள் ஆனாலும்சரி எங்களுடைய யுத்தப் போராட்டங்கள் ஆனாலும்சரி அவற்றை தோற்கடிப்பதற்காக அவர்கள் கையாண்ட முறைகள் எங்களைப் பிரித்தாளுகின்ற நடைமுறைகள்தான். 

இன்று இருக்கின்ற அபாய நிலமை என்ன தமிழ் மக்கள் சிங்கள தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டு வாக்களித்து இருக்கின்றார்களள? உண்மையான நிலையில் அவ்வாறான நிலைமை முற்றும் முழுதாக இல்லை என்பதுதான் எனது கருத்து. 

கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட வீதமாக தென்னிலங்கை சிங்கள தேசிய கட்சிகளுக்காக பிரிந்து வாக்களித்தார்கள். அதில் ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள். தற்போது அந்த கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் ஒன்று திரண்டு தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் வாக்களித்து இருக்கிறார்கள். அதற்கு அப்பால் தமிழ்த் தேசியத்தின்பால் ஒற்றுமையின்மை எங்களுடைய இராஜதந்திரமின்மை எல்லாம் கலந்து இருக்கின்றன. ஆகவே அவ்வாறு வாக்களித்ததனால் இன்று அவர்களுக்கு வடகிழக்கில் அதிகப்படியான ஆசனங்களை கொடுத்திருக்கின்றது. 

ஆனால் அவர்களுக்கு 25 வீதத்திற்குக் குறைவான வாக்குகள்தான் வடகிழக்கில் கிடைத்திருக்கின்றன. 

சமகால சூ+ழலில் இருக்கின்ற கட்சி நெறிமுறைகளில் குறை கூறுவதை தவிர்த்து நாம் என்ன ஆக்கபூர்வமான நடைமுறைகளை கொண்டுவர இருக்கின்றோம் என்பதுதான் மிக முக்கியமான விடயமாகும். தமிழ் மக்களைப் பொருத்தவரையில் மிகமுக்கியமாக அரசியல் தீர்வு என்பதுதான் மிகமுக்கியமானதாகும். அதிலிருந்து நாம் பயணிக்க வேண்டும் என்பதுதான் இங்கே கருதப்பட வேண்டியுள்ளது. 

தமிழ் மக்களின் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான பொதுவான அரசியல் தீர்வு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும், ஒருமித்த கருத்துக்கள் இருக்க வேண்டும், இல்லையேல்; தென்னிலங்கை தேசிய கட்சிகள் அல்லது சர்வதேசத்தினுடைய இராஜதந்திரிகள் அனைத்தும் ஒற்றுமையின்மை என்ற காரணத்தையே கூறுவார்கள். 

அதுபோல் தேர்தலிலும் நாம் அனைவரும் ஒன்று திரண்டு பயணிக்க வேண்டும். பதவிகளுக்கு அப்பால் வெளிநாடுகளாலும் ராஜதந்திரிகாளாலும் அடையாளப்படுத்தப்படுகின்ற தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்பதற்கு அப்பால்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றதனால் தமிழ் மக்களின் கருத்துக்களாக அவர்கள் பார்க்கின்றார்கள். அந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு பயணிக்க வேண்டும்.

 

இவ்வாறான விடயங்களிலே நாம் அனைவரும் ஒன்று இணைந்து பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. இந்த சூழல் ஒரு சவாலான சூழலாக வடகிழக்கு தமிழ் தேசிய பரப்பில் காணப்படுகின்றது என்பதுதான் உண்மை. இதனை வெற்றி கொள்ளக் கூடிய அளவு இராஜதந்திரமிக்க தலைமைத்துவம் நாம் சமூக ரீதியாக ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதுதான் எனது சவாலாக இருக்கின்ற விடயமாகும்.

நாம் மற்றவர்களை குறை கூறுவதை விடுத்து நாம் இந்த மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களுக்கு மிக பிரச்சனையான விடயம். கடந்த காலங்களிலே போராட்ட விடயங்களை நசுக்குவதற்காக அச்சட்டத்தைப் பயன்படுத்தினார்கள். எதிர்காலத்திலே எங்களுடைய உரிமைகளைபெற வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. எமது உரிமைகளுக்காக போராட வேண்டி ஏற்பட்டால் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது வரஇருக்கின்ற அரசை பாதுகாக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டம் என்பன எங்களுக்கு எதிராக திரும்பக் கூடும். எனவே தீர்க்க தரிசனம் இருக்கக் கூடிய வகையில் அந்த சட்டங்களை நாங்கள் எதிர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. 

எமது நிலஅபகரிப்பு விடையத்திலேயே நாங்கள் நிச்சயமாக போராட வேண்டிய தேவை இருக்கின்றது. கிழக்கு மாகாணங்களில் தென் இலங்கை தேசிய அரசாங்கத்தின் திட்டம் நிலத்தை சிதைத்து விடுவதுதான் அவர்களது நோக்கம். அதன் மூலம் இன விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் எமது பேரம் பேசும் பலத்தை இல்லாத ஒழிப்பதாகும். நாம் அதற்காக போராடுகின்றோம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.

மாகாண சபை என்பது எமது அடிப்படையான தீர்வு ஒன்று அல்ல அடிப்படையாக தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது அதற்கு கிடைத்திருக்கின்ற அரசியல் தீர்வு என்ற அடிப்படையில்தான் மாகாண சபைக்காக நாம் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றதே தவிர மாகாண சபைதான் எமது அரசியல் தீர்வு என்பதை நாம் இந்த இடத்திலும் தொட்டு காட்ட முடியாது.

தந்தை செல்வா கூறியது போன்று சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்காகதான் தமிழ் மக்களின் போராட்டம் இருக்குமே தவிர நாங்கள் மாகாண சபைக்கான போராட்டம் அல்ல. அதையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக சிங்கள தேசிய இனம் அவர்களை அடிப்படையான எண்ணக்கரு ஒன்றுபட்ட நாட்டுக்குள் நீங்கள் பயணியுங்கள் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கின்றார்கள்.

நாங்கள் அடிப்படையில் நாம்  300 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் தனித் தனி இராஜ்யங்களாகவும் தனித்தனி கலாசாரங்களாகவும், பாரம்பரிய நிலத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பின்பு ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாம் வந்திருந்தாலும் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் எங்களுடைய சுய நிர்ணய உரிமை கிடைக்கப்பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். ஆகவே நாங்கள் அந்த விடயங்களிலும் பாரிய கவனம் செலுத்த வேண்டியுள்ள பொறுப்பு இருக்கின்றது. 

கிழக்கு மாகாணத்தில் தற்போது இன விகிதாசாரம் சம்பந்தமாக பாரிய நெருக்கடி இருக்கின்றது. நாங்கள் நீண்ட காலமாக அரசியல் பயணம் செய்திருக்கின்றோம். தமிழ் மக்களின் வாக்களிப்பு முறையில் 50 வீதத்துக்கு மேல் வாக்களிப்பது இல்லை. ஆனால் ஏனையவர்கள் 80 வீதத்துக்கு மேல் வாக்களிக்கின்றார்கள். இதன்மூலம் அவர்களுடைய ஆசன எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. மாகாண ஆட்சியை கைப்பற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்கின்றார்கள் இவ்வாறான விடயங்களில்தான் என்ன விடயங்களை முன்னெடுக்கின்றோம் தமிழ் மக்களுக்கு போதிய விழிப்புணர்வுகள் கொண்டு செல்கின்றோமா என்பது இங்கு பார்க்கப்பட வேண்டும்.

தாங்கள் அரசியல் ரீதியில் கதிரைகளுக்காக அடிபடாமல் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக என்ன விடயங்களை நாங்கள் தமிழ் தேசியக் கட்சிகள் முன்னெடுத்தோம் என்று பார்த்தால் அந்த் விடயங்கள் தேங்கிக் விடக்கின்றன.

ஆகவே மற்றவர்களை பதவி சம்பந்தமாகவோ விமர்சிப்பதை விடுத்து நாங்கள் சிவில் சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும். அதன் மூலமாக நாம் ஒன்றுதிரள வேண்டும். ஏனெனில் நிலையான கருத்துக்களை மக்களுக்கு பதிலாக பெற்றுக் கொடுக்க வேண்டும் அதனை வழி நடத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தலைமைகளுக்கும் உண்டு. அவர்கள் முன்வர வேண்டும் மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அவர்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி அவர்களை வழிநடத்துவதற்காக அவர்களுக்காக நாம் முன்வந்து செயல்பட வேண்டும்.

அன்று மிகப்பெரிய பலத்துடன் பயணித்து நாங்கள் இன்று ஒன்றுமில்லாத நிலையில் இருக்கும் இச்ச சூழ்நிலையில் என்ன வகையான போராட்டங்களை நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். ஆகவே சுயமான சிந்தனையில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கினறோம்.

நாங்கள் அனைவரும் மக்களுக்கான தேவைகளையும் எமஇனத்தின் விடுதலைக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. விழிப்புணர்வுகளை கொண்டுவர வேண்டிய தேவை இருக்கின்றது. அந்த விடயங்களுக்கு தடையாக இருக்கின்ற விடயங்களை இந்த பயங்கரவாத தடைச் சட்டம் நிலங்களளை அபகரித்தல், மொழியை அழிக்கின்ற விடையம் போன்ற விடயங்களில் எமது அடிப்படையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்குதான் இந்த இடத்தில் அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கும் பின்னால் அணி திரள வேண்டிய நிலைமை உருவாக வேண்டும். ஆகவே இந்த விடயங்களை நாங்கள் எங்களுக்குள் அடிபட்டு தென்னிலங்கையின் தேசியவாதத்திற்குத் தீனி போடுவதை விடுத்து நாங்கள் மிக கவனமாக இராஜதந்திரமாக எங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.



 

SHARE

Author: verified_user

0 Comments: