21 Jul 2025

ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால நாட்டின் மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும். யாழ் பல்கலைக்கழக இணைப்பாளரும் விரிவுரையாருமான மேனகா.

SHARE

ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால நாட்டின் மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும். யாழ் பல்கலைக்கழக இணைப்பாளரும் விரிவுரையாருமான மேனகா.

சிறுவர்கள்தான் எதிர்கால மனித வளம் என்பதால் ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால நாட்டின் மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மனைப்பொருளியல் அலகின் இணைப்பாளரும் விரிவுரையாருமான மேனகா சிவாகரன் தெரிவித்தார். 

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் “இலங்கையில் மோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் குழந்தை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்எனும் இளந்தளிர் திட்டத்தின் போஷாக்குணவு தயாரிப்பு நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டு அவர் பயனாளிகளுக்கு மத்தியில் கருத்துத் தெரிவித்தார். 

மட்டக்களப்பு  இந்து  இளைஞர் மன்ற பயிற்சி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (20.07.2025)  விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் சமூக ஒருங்கிணைப்பாளர் பாலசிங்கம் முரளீதரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், உளநலப் புனர்வாழ்வு நிலைய அலுவலர்கள், பல்கலைக்கழக மாணவிகள், யுவதிகள், சிறுவர்கள், போஷாக்குத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிக் குடும்பங்களின் பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளர் மேனகா, 

இந்தத் திட்டம் இரண்டு வகைகளில் முன்னுரிமை பெறுகிறது. சிறுவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்களது போஷணையை மேம்பாடடையச் செய்வதன் மூலம் எதிர்காலச் சந்ததி போஷாக்கானதாக மாறும் நாட்டின் கல்வித்தரம் பொருளாதாரம் சுகாதாரம் உயரும். 

பிரதேசத்தில் மலிவாகவும்  வளமாகவும் கிடைக்கக் கூடியதாகவுள்ள மூலப் பொருட்களைக் கொண்டு எவ்வாறு எமது போஷணை மட்டத்தை விருத்தி செய்து கொள்ளலாம் அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் வழிவகை காண்பிக்கப்படுகிறது. 

ஓரங்கட்டப்பட்டுள்ள சிறுவர்களுடைய போஷணைகளை மேம்படுத்தும் விதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் ஏறாவூர்பப்ற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 240 சிறுவர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். 

சமகாலத்தில இலங்கையில் நிலவும் சாதாரண குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி காரணமாக வறிய குடும்பங்கள் மத்தியில் போஷணையான உணவு நுகர்வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். 

நிகழ்வில் பாரம்பரிய கிராமிய போஷணைமிக்க உணவுகளான மரவள்ளிக்கிழங்கு வடை, ரொட்டி, குரக்கன் பூசணிக்காய் கலப்பு ரொட்டி, குரக்கன் கூழ், இலைக்கஞ்சி, அவல் பாயாசம், தோசை, புட்டு உள்ளிட்ட இன்னும் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரித்துக் காண்பிக்கப்பட்டதோடு தயாரிக்கப்பட்ட உணவுகள் பங்குபற்றுநர்களுக்குப் பரிமாறப்பட்டு சுவை பார்க்கப்பட்டது. 

தன்னார்வத்; தொண்டு நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக  பின்தங்கிய, அடிமட்ட கிராம மக்களின்  கல்வி, சுகாதாரம், போசாக்கு, தொழில்வாய்ப்பு, பெண்கள் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், நல்லாட்சி, சகவாழ்வு போன்ற விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்காக  நீடித்து நிலைக்கும் வாழ்வாதார விவசாய செயல்திட்டங்களைத் துவங்கியுள்ளதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி  இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.



















SHARE

Author: verified_user

0 Comments: