கிளீன் ஸ்ரீலங்கா கசிப்பை கிளீன் செய்யுமா
பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் கேள்வி.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை அறிமுகப்படுத்திச் செயற்படுத்துகின்றது. இந்தத் திட்டம் ஊழல், மோசடி, கையூட்டு, சட்டவிரோத செயல்கள், கறுப்புப் பணம், புற அசுத்தங்கள் போன்ற அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று முற்போக்கான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
அது நடைபெற்றால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குறிப்பாக மட்டக்களப்பில் கசிப்பு, கள்ளச் சாராய உற்பத்திகள், வியாபாரம் தாண்டவமாடுவதாக மக்கள் முறையீடு செய்கின்றனர். அதற்கான தகவல்களையும் வழங்கி வருகின்றார்கள். ஆனால்,கசிப்பின் தாண்டவத்தினைக்கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் சனிக்கிழமை(15.02.2025) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
ஜனாதிபதி அநுர அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தியின் கிளீன் ஸ்ரீலங்காத்திட்டம் கசிப்பைக் கட்டுப்படுத்துமா? என்ற கேள்வி எழுகின்றது. பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொலிசார், கலால் உத்தியோகத்தர்கள், மதுக்கட்டுப்பாட்டு உத்யோகத்தர்கள், படையினர் கூட்டாக உணர்வு பூர்வமாக ஒத்தழைத்தால், கசிப்பை இல்லாது ஒழிக்க முடியும்.
கிராமங்களில் வறுமை, போசாக்கு இன்மை, குடும்ப வன்முறைகள், நஞ்சூட்டல், மரணம், நோய், மாணவ இடை விலகல், பாண்பாட்டு சீர்குலைவு போன்ற அனைத்திற்கும் கசிப்பு, போதை வஸ்துப் பாவனை போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.
எனவே, இவற்றை ஒழிப்பதற்கு கிளீன் ஸ்ரீலங்காத்திட்டம் உச்சளவில் பயன்பட வேண்டும். போதைப்பொருட்களை ஒழிக்காமல் கிளீன் ஸ்ரீலஙகாத் திட்டத்தினால் முன்னேற்றம்காண முடியாது. மட்டக்களப்பில் படுவான்கரைப் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி, வினியோகம், பாவனை மிக அதிகரித்துள்ளது.
யுத்தகாலத்தில் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசமாக படுவான்கரை இருந்தபோது கசிப்பின் மணம்கூட அங்கு இருக்கவில்லை என்பது மக்களின் கருத்தாகும். யுத்தம் முடிந்த பின்னர் படுவான்கரையில் கசிப்பு கோரத்தாண்டவம் ஆடுகின்றது. பொலிஸார் இவ்விடயத்தில் என்ன செய்கின்றார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். எது எப்படியாக இருந்தாலும், தேசியமக்கள் சக்தியின் “கிளீன் திட்டம்” வெற்றி பெற்றால் கசிப்பின் தாண்டவத்தை ஒழிக்க முடியும். என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment