25 Feb 2025

தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்.

SHARE

தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்.

ஈழத்தாயகத்தில் இருந்து 1970 களில் லண்டன் சென்று அங்கு வாழ்ந்தவர் ஆனந்தி அவர்கள். அங்கு அவர் லண்டன் பிபிசி இல் ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பணியாற்றி இருந்தார். பிபிசி தமிழோசை மூலமாக ஈழத்தமிழர்களின் அவலங்களை உலக மெல்லாம் உரைத்தவர் சகோதரி ஆனந்தி அவர்கள். அவர் இலங்கை வானொலியிலும் ஆத்மார்த்த ரீதியாகப் பணியற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். 

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீசிநேசன் தெரிவித்துள்ளார். அண்மையில் காலம் சென்ற பிபிசியில் பணியாற்றிய  ஊடகவியலாளர் ஆனந்தி தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 

வெறுமனே தொழிலாக ஊடகத்துறையை அவர் பயன்படுத்தவில்லை. அப்பணியை தமிழ்ப் பணியாக, தமிழர் பணியாக, அறப்பணியாக, அவர் பயன்படுத்தினார். அவரது செய்திக்குரல் உரிமைக்குரலாக, உணர்வுக்குரலாக, உலகமெங்கும் ஒலித்தது. 

பாதிக்கப்பட்ட தாயகத் தமிழர்களின் அவலங்கள் உள்நாட்டில் தணிக்கை என்னும் தடுப்புகள் மூலமாக மறைக்கப்பட்டன. மறைக்கப்பட்ட பல உண்மைகளை உறைக்கக் கூடிய வண்ணம் உலகத்திற்கு உரைத்தவர் தான் சகோதரி ஆனந்தி அவர்கள். 

குரலற்ற ஈழத்தமிழர்களின் குரலாக ஒலித்த ஆனந்தி அவர்களைத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். 

அதே போன்றவர்தான் விமல் சொக்கநாதன் அவர்களும், இவர்களது தமிழ்ப்பணிகளை, தமிழர் பணிகளை, என்றும் நாம் நெஞ்சில் சுமந்த வண்ணம் இருப்போம். காலம் என்றோ எம்மைக் கவரும். கவரும் வரை அவரவர் ஆற்றிய பணிகள் காலத்தை வென்று நிற்க வேண்டும். அப்படித்தான் ஆனந்தி அவர்களது தமிழருக்கான பணியும் காலத்தை வென்று நிற்கும். சகோதரி ஆனந்தி நாமம், பணிகள் வாழ்க. அவரது ஆத்மா சாந்தி பெறுக. என அவர் அதில்; குறிப்பிட்டுள்ளார்.


 

SHARE

Author: verified_user

0 Comments: