எமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் அமைந்திருந்தது. இன்று நாடு ஓரளவேனும் முன்னேக்கி நகர்ந்திருக்கிறது – பா.உ பிரபு
தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டு மாத காலம் முதல் கடந்திருக்கின்றன. எமது அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் அமைந்திருந்தது. இன்று நாடு ஓரளவேனும் முன்னேக்கி நகர்ந்திருக்கிறது. அதனை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் அதனூடாக மக்கள் நன்மடைய வேண்டும் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் நோக்கமாகும்.
என பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் புதன்கிழமை(29.01.2025) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
ஜனாதிபதி அவர்கள் கடந்த காலத்திற்கு குறிப்பிட்டிருந்தது போல் மக்கள் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக அரச நிறுவனங்களை நாடும்போது அரச அதிகாரிகள் பொறுப்போடு அதனை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்காக இருக்கின்றது. மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதையும் அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே உறவு மிக நெருக்கமாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் எமது வேலை திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
முதலாவதாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். சுற்றுப்புறச் சூழலை மாத்திரம் கிளீன் செய்வதில்லை, அதனூடாக எங்கள் மனங்களிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே இந்த கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
ஆகவே நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை ஒரு செழிப்பான நாடாக மாற்ற வேண்டும் அதற்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஒருங்கிணைப்பில் அப்பிரதேசத்திற்கான இவ்வருடத்தின் முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்ட இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், அரச திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசாங்கத்தினால் கடந்த வருடம்
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், நடைமுறைப்படுத்த முடியாமல்போன செயற்றிட்டங்கள்,
தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கல்வி, வீதி, விவசாயம், வீதி, சுகாதாரம், இராணுவத்தினர்
தங்கியிருக்கும் குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணி விடுவிப்பு,
உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
0 Comments:
Post a Comment