வளங்களையும் நிலங்களையும் பாதுகாத்து
கொண்டுசென்று மக்களுக்கு கையளிக்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம் - பிரபு
எம்.பி
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்கால சந்ததியினருக்காக எமது வளங்களையும் நிலங்களையும் பாதுகாத்து கொண்டு சென்று மக்களுக்கு கையளிக்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக திங்கட்கிழமை(20.01.2025) கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின் மாவட்டத்தின் வெள்ள பாதிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
மட்டக்களப்பு மாவட்டமானது வெள்ளத்தில் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டமாக காணப்படுவதனால் எதிர்காலத்தில் விவசாய அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஊடாக கலந்தாலோசிக்கப்பட்டு மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குளங்களைப் புனரமைப்பது ஊடாக இந்த வெள்ள அனர்த்ததில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது சம்பந்தமாக வெள்ள நீரினை சேமித்து விவசாயிகளுக்குரிய வெள்ள நிவாரணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
அனர்த்த நேரங்களில் விவசாய நிலங்கள் பாதிப்பதை
தடுக்கும் நோக்கிலும் சட்டவிரோத மண் அகழ்வு இந்த வெள்ள அனர்த்தத்திற்கு ஒரு காரணமாக
அமைகின்றது. இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில்
எடுக்கப்பட உள்ளன. என அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தினால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் ஆலோசனையின் பேரில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு திங்கட்கிழமை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கமநல அபிவிருத்தி திணைக்களத்திக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.
இதன்போது மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சேதவிபரங்கள், விவசாய காப்புறுதி, விவசாயிகளுக்குரிய உர மானியம் வழங்குதல், கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்குதல், படுவான்கரை பகுதியிலுள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களின் கட்டிடங்கள், ஆளணி பற்றாக்குறைகள், மாவட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் பயிற்சிகள், சிறிய நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பு, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜெகநாத்திடம் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் இதன்போது மாவட்டத்திலுள்ள கமநல அபிவிருத்தி திணைக்கள பணியாற்றும் ஊழியர்களிடம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாய அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அதிகாரி ர.வேனுஜன் மற்றும் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிடட பலரும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment