வருகின்ற அரசாங்கத்துடன் இனப்பிரச்சனை தொடர்பில் பேசவேண்டிய அவசியம் தமிழரசுக் கட்சிக்கு உள்ளது – வேட்பாளர் சிறிநேசன்.
தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், இனப் பிரச்சனையின் தீர்வு தொடர்பாகவும், இன்னும் பல முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாகவும், பேச வேண்டிய அவசியம் தமிழரசு கட்சிக்கு நிச்சயமாக இருக்கின்றது.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பாட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(20.10.2024) தேர்தல் பரப்புகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தமிழர்களாகிய நாம் விலை போகாத தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக களுவாஞ்சிகுடி பிரதேச மக்கள் என்னிடம் நேரில் தெரிவித்தார்கள். இந்நிலையில் இந்த பொதுத் தேர்தலில் பல்வேறு பட்டவர்கள், பல்வேறு நோக்கங்களுக்காகவும், சுய நோக்கங்களுக்காகவும், களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள், இந்த நிலையில் மக்கள் தமிழரசி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி மூன்று அல்லது நான்கு ஆசனங்களை பெற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
மக்கள் இந்த விதத்தில் மிகவும் நியாயமாக சிந்தித்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மக்கள் இந்த தேர்தலில் சரியாக சிந்தித்து சரியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அதனால் எதிர்வரும் 14 ஆம் திகதி எனது தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதை நாம் கேட்க வேண்டும். எனவே மக்கள் வீட்டு சின்னத்திற்கும் எனது 6 ஆம் இலக்கத்துக்கும் வாக்களிப்பதோடு மக்கள் விரும்பும் ஏனைய இரு வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை செலுத்த முடியும்.
விஷமத்தனமான செய்திகளை பரப்பக்கூடிய விதத்தில் சிலர் செயல்படுகின்றார்கள். அவையெல்லாம் அழுக்காறு காரணமாக காழ்ப்புணர்ச்சி காரணமாக, செய்யப்படுகின்ற செயற்பாடுகளாய் இருக்கும். அவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு ஊழல் மோசடி லஞ்சம், கையூட்டல், இல்லாமல் அரசியல் செய்யக்கூடியவர்களையும், மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் செய்யக்கூடிய வேட்பாளர்களையும், மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் எமது பணிகள் சகல மக்களையும் பிரதேசங்களை மையமாகக் கொண்டுதான் எமது செயற்பாடுகள் நடைபெற்றன. அதற்கான ஆதாரங்களை இப்போது மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்ற போது தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்து கிராமங்களுக்கும் எங்களுடைய உண்மையான நேர்மையான பணிகளை மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், இனப் பிரச்சனையின் தீர்வு தொடர்பாகவும், இன்னும் பல முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாகவும், பேச வேண்டிய அவசியம் தமிழரசு கட்சிக்கு நிச்சயமாக இருக்கின்றது. உண்மையில் பேசித்தான் ஆக வேண்டும் பேசுகின்றபோது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு இருக்கின்றது. நீண்ட காலமாக 75 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் போயிருக்கின்ற இன பிரச்சனைக்கான தீர்வை நாங்கள் பெறுவதற்காக அனைத்து கைங்கரியங்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்வோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment