மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலய தேரோட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் மாங்காடு மத்தியிலே கோயில் கொண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்று மட்டக்களப்பு தமிழகத்தில் தேரோடும் பெரும் பதிகளில் ஒன்றாக விளங்கும் கட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ பெருவிழாவின் தேரோட்ட திருவிழா பக்தர்கள் புடைசூழ புதன்கிழமை(21.08.2024) இடம்பெற்றது.
சிவாச்சாரியார்களின் மந்திர உச்சாடனத்துடன் பூ மழை பொழிய பக்தர்களின் அரோகரா கோசம் விண் அதிர்ந்து நிற்க வெவ்வினைகளை வேரகற்று விநாயகா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரேறி வலம் வந்து அடியார்களுக்கு கட்டுப்பிள்ளையார் அருள் பாலித்தார்.
வயலும் வயல்சார்ந்த இயற்கை எழில்மிகு வனப்புமிக்க இடம்தனில் அமர்ந்துள்ள நிகரில்லா அருளாட்சி புரியும் விக்கினங்கள் தீர்க்கும் வேழமுகத்தான் சித்திரத்தேர் ஏறி சிங்காரமாய் வலம்வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
கட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மஹோற்சவம் கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று பின்னர் படர் சப்புரத் திருவிழா இடம்பெற்றதுடன் புதன்கிழமை இரதோற்சவத் திருவிழா இடம்பெற்றதுடன் வியாழக்கிழமை(22.08.2024) நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் 2024ம் ஆண்டுக்கான மஹோற்சவம் வெகு சிறப்பாக நிறைவு பெற்றது.
மஹோற்சவ திருவிழாவானது ஆலய தர்மகர்த்தாவும் ஆலய பிரதமகுருவுமாகிய கிரியா திலகம், ஜோதிட திலகம், வாமதேவசிவாச்சாரியார் சிவஸ் ஸ்ரீ நா.குணகேந்திரன் குருக்கள் அவர்களின் தலைமையிலான குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment