கடந்த காலத்தில் அபிவிருத்திகள் நடைபெறாமலிருந்ததற்கு யுத்தம் காரணம் அல்ல – பிரசாந்தன்.
கடந்த காலத்தில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகள், நடைபெறாமலிருந்ததற்கு யுத்தத்தைக் காரணம் காட்டுகின்றார்கள். உண்மையிலே அவற்றுக்கு யுத்தம் காரணம் அல்ல. அபிவிருத்திகள் பின்னடைந்ததற்கு நாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய தலைவர்கள்தான் காரணமாகும்.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சினால் களுதாவளைப் பகுதியில் வீதிகளுக்குக் கார்பட் இட்டு புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டம் புதன்கிழமை(15.04.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
பாதை சீரின்மை காரணமாகவே தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் கல்வி பின்னடைந்ததற்குக் காரணமாகும். எனவே பாதைகளைச் செப்பனிடும்போது அப்பிரதேசம் தாமாகவே வலுவடையும். தமிழர்களின் அடையாளங்களாகத் திகழ்கின்ற ஆலயங்களுக்குச் செல்லும் வீதிகள் அடங்கலாக அனைத்து வீதிகளையும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் செவ்வனே செப்பனிட்டு வருகின்றார்.
கடந்த காலத்தில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திகள் நடைபெறாமலிருந்ததற்கு யுத்தத்தைக் காரணம் காட்டுகின்றார்கள். உண்மையிலே அவற்றுக்கு யுத்தம் காரணம் அல்ல. அபிவிருத்திகள் பின்னடைந்ததற்கு நாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய தலைவர்கள்தான் காரணமாகும்.
ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பகுதிகளைப் பாருங்கள் என அனைவரும் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றார்கள். அந்த சமூகத்தினர் வாக்களித்து அனுப்பிய தலைவர்கள் அவர்களுக்குச் சார்பாக வேலை செய்கின்றார்கள். மாறாக நாம் ஒவ்வொரு தடவையும் வாக்களிப்பதற்குத் தவறுவதில்லை. குறிப்பாக பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றோம். அவ்வாறான தலைவர்கள் சரியாகச் செயற்படுகின்றார்களா என்பதை அளந்து பார்க்க வேண்டியது மக்கள்தான்.
நாம் அரசியலை தொடர்ந்து பேசாவிட்டாலும், அரசியல் இல்லா விட்டால் எதையும் செய்ய முடியாது. சட்டங்களை இயற்றுவதும் பாராளுமன்றம்தான் அதனை நடைமுறைப்படுத்துவதுதான் அதிகாரிகள். எனவே நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்தைத் தீர்மானிப்பது அரசியலாகும். எனவே நமது சமூகம் காலத்திற்குக் காலம் வாக்களித்து வாக்களித்து தற்போது நடுத்தெருவில் நிற்கின்றது. எனவே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் நல்ல அரசியல் தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும்.
பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் இருப்பவர்கள் தமிழ் தேசியத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, தமிழ் தேசித்தின் பின்னால் சென்றதனால் எந்த வேலையும் நடைபெறவில்லை. எனவே பட்டிருப்புத் தொகுதி மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை ஆனால் நாம் அதிக நிதிகளைச் செலவு செய்து அதிகளவு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இத்தொகுதியில் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதாகும். அந்த தலைவர் ஊடாகத்தான் நமது மாவட்டத்தையும், மக்களையும் வலுவாக்க முடியும் என்பதைச் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். முதலில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அவற்றை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவர் க.பாஸ்கரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதே சபையின் செயலாளர் ச.அறிவழகன், மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment