மக்களை ஒரு கொடூரமான அடக்கு முறைக்குள் வைத்துள்ளனர்.
மக்களை ஒரு கொடூரமான அடக்கு முறைக்குள் வைத்துக் கொண்டு உலக நாடுகளிலே மனித உரிமை பற்றி பேசுகிறார் ரணில் விக்கிரமசிங்க - என்கிறார் செல்வராசா கஜேந்திரன் எம்.பி
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,
தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகிய இருவரும் சனிக்கிழமை(13.01.2024)
நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சிறைக்கு சென்று பார்வையிட்டபின்னர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர் மாதம் இறந்தவர்களை நினைவேந்தல் செய்த காரணத்தால் மட்டும் இவர்கள் ஆறு (06) பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலே தடுத்து வைத்திருப்பது என்பது மிகவும் கொடூரமான செயல் என்பதுடன் தடுத்து வைக்கப்பட்ட அறுவரில் ஒரு நபர் சுகயீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பிணை வழங்குமாறு குடும்பத்தினால் கோரப்பட்டபோதும் இதுவரை பிணை வழங்கப்படவில்லை.
இன்றை இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சலாந்து சென்றிருக்கின்றார். தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுத்து, ஒரு கொரூரமான அடக்கு முறைக்குள் வைத்துக் கொண்டு உலக நாடுகளிலே ஜனநாயகம் பற்றியும் மனித உரிமை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்.
காஸாவில் நடக்கும் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்று முதலை கண்ணீர் வடிக்கின்றார் ஆனால் இங்கே மிக கொடூரமான ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் இந்த நிலையில் சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்க மீது பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
தற்போது அவர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்று ஒன்றையும், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்று ஒன்றையும் கொண்டு வருவதற்கு உள்ளார். தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் எதிர்காலத்தில் தேர்தலில் தனது திருட்டுத்தனங்களையும் நேர்மையீனல்களையும் மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்கும் மக்களை கைது செய்வதற்கும் இந்த நிகழ்நிலை காப்பு சட்டத்தை கொண்டு வரவுள்ளார்.
இந்த இரு சட்டங்களையும் நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம். சர்வதேச சமூக கடும் இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எனெ தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment