நல்லிணக்கத்திற்கான சிறுவர் ஓவியப் போட்டியில் சர்வமத சிறார்கள் பங்கெடுப்பு.
சமூக சகவாழ்வை முன்னெடுக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் செயல்திட்டங்களின் ஒரு அம்சமாக நல்லிணக்கத்திற்காக சர்வமதங்களைச் சேர்ந்த சிறார்கள், ஓவியப் போட்டியிலும் பாரம்பரிய கலையம்சங்களிலும் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் தெரிவித்தார்.
இவ்வாறான ஒரு நிகழ்வு திங்களன்று 06.11.2023 காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தோனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த சிறார்கள் கலந்து கொண்டனர்.
சமூகங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வை வலுப்படுத்தும் விதமாக தேசிய சமாதானப் பேரவையினால் சமாதானத்திற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக நிகழ்வை ஆரம்பித்து வைக்கும்போது மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சகல சமூகங்களையும் சேர்ந்த சிறார்களால் கலையம்ச நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டதோடு சமாதானத்தினூடாக பொருளாதார மேம்பாடு, சமய நல்லிணக்கம், இன ஒற்றுமையில் சிறுவர் பங்களிப்பு எனும் தலைப்புகளில் சித்திரம் வரைதலும் இடம்பெற்றது.
நிகழ்வுகளின்; நிறைவில் நிகழ்வுகளில் பங்குபற்றிய இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூக சிறார்களுக்கு பணப் பரிசுகளும், ஆடைகளும் காத்தான்குடி முஸ்லிம் சமூக கொடையாளர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதேவேளை சர்வமத பிரமுகர்களுக்கு பணக் கொடுப்பனவும் கொடையாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் ரீ.லோகிதாஸ் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ.அப்துல் ஹமீட், செயல் குழுவின் செயலாளர் ஏ.எல். அப்துல் அஸீஸ், ஒருங்கிணைப்புச் செயலாளர் கே.சங்கீதா உட்பட பேரவையின் உறுப்பினர்களும், செயற்பாட்டாளர்களும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment