20 Aug 2023

நல்லொழுக்க சமூகத்தினை உருவாக்குவதில் அறநெறிகளின் பங்கு அளப்பெரியது - பிரசாந்தன்

SHARE

நல்லொழுக்க சமூகத்தினை உருவாக்குவதில் அறநெறிகளின் பங்கு அளப்பெரியது - பிரசாந்தன்.

இளைஞர் சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து பயணிக்க வேண்டிய சூழலிலுள்ளது பொருளாதார நெருக்கடி ஒருபுறம் இருக்க போதைப் பொருள் பாவனை மது பாவனை கெட்ட பழக்க வழக்கங்கள் என்று பல்வேறு தடைக்கட்கள் இளைஞர் சமூகத்தின் வலுவாக்கத்திற்கு பெரும் இடியாக மாறி உள்ளது இந்நிலைமையினை மாற்றி நல்லொழுக்க இளைஞர் சமூகத்தினை உருவாக்குவது அனைவரது பொறுப்பாகும்  என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச அறநெறி பாடசாலைகள் ஆசிரியர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகளுடனான சந்திப்பு, பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்  அவர்களின் ஆலோசனைக் அமைய மண்முனைபற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி அவர்களின் தலைமையில் சனிக்கிழமை(19.08.2023 இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

அரசியல் தலைவர்கள் உட்பட அதிகாரிகள் என அனைவரும் இதற்காக பாடுபடுகின்ற போதும் அதனை நெறிப்படுத்தி வலுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அறநெறி மார்க்க கல்விச் சாலைகளுக்குள்ளது. 

எமது பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில்  பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஞாயிறு மற்றும் பூரணை விடுமுறை தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தாது மாணவர்களின் மார்க்க கல்விக்கும் குடும்ப உறவுகளுடன்  பொழுதினை இனிமையாக கழிக்கும் நோக்கோடும் விடுமுறை விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் நோக்கமானது சிறந்த இளைஞர் சமூகத்தினை உருவாக்கி நல்லொழுக்கம் உள்ள சமூகக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதாகும்.  இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமாக இருந்தால் ஆலயங்களும் அறநெறி பாடசாலைகளும் தங்களது பங்களிப்பினை பூரணமாக வழங்குகின்ற போதுதான் இதனை வெற்றியளிக்கச் செய்ய முடியும்.

குடும்ப பிணைப்பும் மார்க்க வழிகாட்டலும் சிறப்பாக மேற்கொள்ளப்படும் இடத்து போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக பிறள்வான நடவடிக்கைகளில் இளைஞர்கள் நாட்டம் செலுத்துவது நிறுத்தப்படும். பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த வன்முறைகள் அற்ற சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும். குறிப்பாக ஆலயங்கள் இதற்கு முன்னுதாரண வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கும் சமூகத்தின் கல்வி வலுவாக்கத்திற்கும் சமூகத்தின் பொருளாதார வலுவாக்கத்திற்கும் ஆலயங்கள் தங்களிலாளான பங்களிப்பினை வழங்க முன்வர வேண்டும்.

எல்லைப்புறத்தில் இருக்கின்ற நிதிவசதி குறைந்த ஆலயங்களை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிதி மிகுந்த ஆலயங்கள் தத்தெடுத்து குறித்த ஆலயங்களை வழிநடத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று பொருளாதார வசதி படைத்த ஆலயங்கள் இந்த கைங்கரியத்தை செய்வதற்கு முன் வருவதுடன் அனைத்து ஆலயங்களும் அறநெறி பாடசாலைகளை ஆரம்பித்து வழிநடத்துவதில் அக்கறையுடன் சேவையாற்ற வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் இக்கலந்துரையாடலில் பிரதேச சபை செயலாளர் கலாசார இணைப்பாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: