வடக்கு கிழக்கிலே சிறிய சிறிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தாலும், வடகிழக்கில் சிங்கள மயமாக்கல் மேலோங்கியிருக்கின்றது - நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்.
பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் இருக்கும் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்காக பல முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி அபிவிருத்தி உப கருத்திட்டத்தின் கீழ் 33 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேச சபையினால் நிருமாணிக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிரதேச சபை செயலாளர் வி.கௌரிபாலன் தலைமையில் வெல்லாவெளியில் வியாழக்கிழமை(29.06.2023) இடம்பெற்றது இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்நிலையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக முன்னெடுப்புக்களும் நடைபெற்று வருகின்றன. அதற்காக மந்திரி சபை அதற்கு அனுமதி கொடுத்து பாராளுமன்றத்திற்கு அதற்கான சட்டமூலமும் வர இருக்கின்றது. ஆனாலும் இந்த பொருளாதாரச் சூழலுக்கு என்ன காரணம் என்பதை எமது அரசியல் தலைவர்கள் அறிந்தும் அதற்கான தீர்வைப் கொடுக்க முடியாத ஒரு சூழநிலையிலேயே இன்றும் இருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கிலே சிறிய சிறிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தாலும், வடகிழக்கில் சிங்கள மயமாக்கல் மேலோங்கியிருக்கின்றது. கடந்த காலத்தில் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களது காலத்தில் அமைச்சர்களாகவிருந்த உதய கம்மன்பில, விமல் வீரவன்ஸ, சரத் வீரசேகர போன்றவர்கள், சிங்கள மயமாக்கலுக்கு உறுதுடையாக இருக்கின்றார்கள். அரசு இன்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு முயற்சியில் ஐம்பது வீதம், நிறைவேறியுள்ளதாக ஜனாதிபதி லண்டனில் வைத்து தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஐம்பது வீதம் என்பதை எந்த வித்தலும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது வேறு பொருளாதார ரீதியான அபிவிருத்தி என்பது வேறு.
இந்த அரசாங்கம் வந்த பின்னர் ஒருசில நல்ல காரியங்கள் செய்திருக்கின்றன. அதனை நாம் மறந்துவிட முடியாது. காணி விடுவிப்புக்கள் நடைபெற்றிருக்கின்றன, கூடுதலான அரசியல் கைத்திகள் விடுவிக்கப்பட்டிரக்கின்றனர். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு இணைந்த வடகிழக்கிவே ஒரு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியும், எடுக்கப்படவில்லை.
2009 ஆம் ஆண்டு வரையில் இந்த நாட்டிலே ஆயுதப்போராட்டம் நடைந்தது. 2009 இற்குப் பின்னர் இந்த நாட்டின் வடக்கு கிழக்கிலே சிங்கள மயமாக்கல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த யுத்தத்திற்கு ஜனாதிபதி அவர்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் அரச இயந்திரங்கள், அரச அதிகாரிகள் இராணுவத்துடன் இணைந்து அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் மக்களுடைய முன்னேற்றம், அபிவிருத்திக்குத்தான் நான் முதலிடம் கொடுப்பேன், அதற்காக நான் அரசுடன் இணைந்து இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில 256 பேர் போட்டியிட்டு 5 பேர் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் கட்சி சார்ந்து செயற்படக் கூடாது என்பது எனது உறுதியான கொள்கையாகும் என அவர் இதன்போதுதெரிவித்தார்.
0 Comments:
Post a Comment