வடகிழக்கில் அடக்குமுறைகள் தொடர்கின்றன - ஜெயசிறில்.
கடந்த காலங்களில் எமது அம்மாக்களின் பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். வடகிழக்கிலே பல்லாயிரக்கணக்கான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கிங்கு வேறு ஒரு நீதியும், புறக்கணிப்பும், அடக்குமுறையும் தொடற்சியாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் தலைமையில் மூன்று பேரூந்துகளில் பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், உள்ளிட்ட பலரும் சிவப்பு மஞ்சள் நிறமுடைய துணிகளைத் தரித்த வண்ணம் செவ்வாய்கிழமை(07.02.2023) நண்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இனப்படுகொலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்குரிய தீர்வு போன்றவற்றை சர்வதேசம் இதுவரையில் வழங்காமலிருக்கின்றது. சர்வதேசம் இலங்கை அரசுக்கு மேலும மேலும் அழுத்தங்களை சர்வதேசம் வழங்க வேண்டும், என்பதற்காகவும். இலங்கை அரசாங்கம், 75 ஆண்டு காலமாக தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் அடக்கி ஆழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் எமது மக்கள் கடந்த காலங்களில் மிகவும் சொல்லொணாத் துயரங்களை முன்னெடுத்த காலகட்டத்தில், அரசியல் ரீதியாகவும், ஆயுதரீதியாகவும், ஜனநாயக ரீதியில் இணைந்து பயணித்தாலும், இதுவரையில் அரசாங்கம் தமிழர்களை பகடைக்காயாகப் பயண்படுத்தி வெளிநாட்டு அரசாங்கங்களையும், சர்வதேசங்களையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றது.
இதற்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக வடக்கு கிழக்கிலுள்ள பல்கலைக் கழக மாணவர்கள் எடுத்திருக்கின்ற இந்த போராட்டத்திற்கும், பேரணிக்கும் அம்பாறையிலிருந்து அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்திருக்கின்றோம்.
கடந்த காலங்களில் எமது இளைஞர்கள், யுவதிகள், பெரியவர்கள் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களிலும், எமது தமிழ் மக்கள் மீது கை வைக்கக்கூடாது எமது நிலம் எமது தாயகமண் எமக்கு வேண்டும் என்ற போராட்டத்தை நாங்கள் முன்நெடுத்து வருகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது அவர்கள் அடக்காதே அடக்காதே தமிழர்களை அடக்காதே, ஒடுக்காதே ஒடுக்காதே தமிழர்களை ஒடுக்காதே, அரசியல்கைதிகளை விடுதலை செய், எங்கே எங்கே உறவுகள் எங்கே போன்ற பல கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment