பிரதேசத்திலுள்ள அனைத்து சமூக மக்களினதும் ஒருமித்த கருத்துடன் தேவைப்பாடுகள் அபிலாஷைகள் தீர்க்கப்படும்.குச்சசெளி பிரதேச சபைத் தலைவர் ஏ. முபாறக்.
இந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்து சமூக மக்களினதும் ஒருமித்த கருத்துக்களை உள்ளடக்கியதொரு பாதீட்டை (வரவு செலவுத் திட்டத்தை)த் தயாரித்து அதனூடாக பிரதேச மக்களின் அபிலாஷைகள், தேவைகள் தீர்க்கப்படும் என குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ. முபாறக் தெரிவித்தார்.உள்ளுராட்சி மன்றங்களில் அவ்வப் பிரதேச மக்களது திட்ட முன் மொழிவுகளை உள்வாங்கி வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பயிற்சிச் செயலமர்வுகள் குச்சவெளி பிரதேச சபையில் ஞாயிறு திங்கள் (09.10) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற்றது.
உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள நிதி, பௌதீக, மனித வளங்களை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்தி பிரதேச மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் செயற்திட்டமாக இந்த செயலமர்வுகளை இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வ உதவு ஊக்க அமைப்பு நடத்தி வருகின்றது.
யூ.எஸ். எய்ட் சர்வதேச தன்னார்வ நிறுவனத்தின் நிதி அனுசரைணயில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் மக்களையும் பிரதேச சபை நிருவாகத்தையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சிச் செயலமர்வில் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் ஏ. முபாறக், உப தலைவர் ஏ.எஸ்.எம். சாஜித், செயலாளர் ஏ. மாலினி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டாரங்களிலுள்ள சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பெண்கள் இளைஞர்கள் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சிச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் முபாறக்
இதுவரை காலமும் சபைக்கான வரவு செலவுத் திட்டத்தை நாங்களாகவே தயாரித்து அதனூடாக இந்த சபையின் நிருவாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தோம். ஆனால், தற்போது அந்த முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதேச பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கி பிரதேச மக்களின் முன்மொழிவுகளுக்கேற்ப எந்தவிதமான பாகுபாடுகளுமில்லாமல் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சகல கிரமங்களுக்கும் நகரங்களுக்கும் வழங்கப்படும் சேவைகள் பூரணத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பிரதேச மக்கள் இப்பிரதேச சபையினூடாக ஒரே குடையின் கீழ் வாழ வேண்டும். அதனடிப்பயைடில் இந்த சபை எதிர்காலத்தில் அதன் நடவடிக்கைகளை பிரதேசத்திலுள்ள அனைத்து சமூக மக்களினதும் ஒருமித்த கருத்துடன் உள்ளடக்கியதொரு பாதீட்டை (வரவு செலவுத் திட்டத்தை)த் தயாரித்து அதனூடாக பிரதேச மக்களின் அபிலாஷைகள் தீர்க்கப்படும். அந்த ஒழுங்கினடிப்படையில் இந்த சபை சுமுகமாகவும் சிறப்பாகவும் இயங்கும். அதற்கான முன்னோடி கருத்தரங்குகளையும் பயிற்சிகளையும் ஏற்பாடுகளையும் மேற்கொண்டு அகம் நிறுவனம் எமக்கு ஆலோசனைகளையும் அனுசரணையையும் வழங்கி வருகின்றது.
அதற்காக இந்த சபையின் சார்பிலும் பிரதேச மக்களின் சார்பிலும் எமது நன்றிகள்” என்றார்.
பயிற்சிச் செயலமர்வின் இறுதியில் மக்கள் பங்கேற்புடனான வரவு செலவுத் திட்டத்திற்காக பிரதேச மக்களால் முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் அடையாளம் காணப்பட்டு குச்சவெளி பிரதேச சபை நிருவாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் பொன். சற்சிவானந்தம் அதன் திட்ட உத்தியோகத்தர் வேலாயுதம் மோகன் ஆகியோர் பயிற்சிச் செயலமர்வை நெறிப்படுத்தினர்.
உள்ளுராட்சித் திணைக்கள சிரேஷ்ட சமூக அபிவிருத்தி அலுவலர் சட்டத்தரணி அன்பழகன் குறூஸ் வளவாளராகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
0 Comments:
Post a Comment