10 Sept 2022

பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.

SHARE

பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.

பாம் பவுண்டேசனால் நடைமுறைப்படுத்தப்படும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ்  பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளிக்கிழமை(09)  24 பெண்களுக்கு வாழ்வாதாரத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந் நிகழ்வு அரசடித்தீவு பாலர் பாடசாலை மண்டபத்தில் பாம் பவுண்டேசனின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான திட்ட உத்தியோகத்தர் திருமதி பிரியதர்சினி சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,  பாம் பவுண்டேசனின் வெளிக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நெதர்லாந்து பாம் பவுண்டேசனின் நிதிப் பங்களிப்பில் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனில் தொம்பேபொலவின் தீர்மானத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தப்படும் நான்காவது கட்டம் இதுவாகும். ஏற்கனவே, மகிழடித்தீவு, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில்மூன்று கட்டங்களில் 147 பெண்களுக்கு வாழ்வாதாரத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், அரிசி வியாபாரம், இடியப்ப வியாபாரம், வீட்டுத்தோட்டம், தயிர் வியாபாரம், சில்லரைக்கடை, மிளகாய்த்தூள், அரிசிமா விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களுடைய தொழில்களை மேம்படுத்துவதற்காக இவ் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 25000 ரூபா பெறுமதியான அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், பொருள்கள் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலாளர், இவ்வாறான உதவிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் மிகவும் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதே நேரத்தில் உங்களது தொழிலை தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இவ்வாறான உதவிகள் பெறுமதியானவையாக அமையும்

போசாக்கின்மை என்ற விடயத்தை இல்லாமல் செய்யமுடியும். ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பமுடியும். இவையெல்லாம் அம்மா நினைத்தால் முடியும். பிள்ளைகளுக்கு எது ஆரோக்கியம், எது ஆரோக்கியமில்லை என்பதனை சரியாக அறிந்து வழிப்படுத்தும் போது நிச்சயமாக எங்களுடைய சமூதாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்குமு; ஒரு பிள்ளையால் எதனையும் அடைந்து கொள்ளமுடியும் என்றார்.

 













SHARE

Author: verified_user

0 Comments: