மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தின் நான்காவது திட்டம் சிவானந்தியன் நண்பர்களால் முன்னெடுப்பு.
மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் சிவானந்தியன் நண்பர்களால் முன்னெடுக்கப்படும் நான்காவது பாடசாலைத் திட்டம் கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் முகமாக " மகிழ்ச்சிகர மாணவர்
பயணம் " எனும் தொனிப்பொருளில் 1998 மற்றும் 2001 ஆம் ஆண்டு சாதாரண தர மற்றும்
உயர்தரத்தில் சிவானந்தாவில் படித்த மாணவர்களின் மாதாந்தச் செயற்பாடாக மேற்படி திட்டமானது
நடைபெற்றுவருகிறது.
அதன்படி இம்மாதத்திற்கான திட்டத்தில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயம்
தெரிவுசெய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சுமார் 35 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர்களில் ஒருவரான செல்லத்துரை பிரேமானந்தன் அவர்களின்
அனுசரணையில் இடம்பெற்ற நிகழ்வினை பாடசாலை அதிபர் தலைமைதாங்கியதோடு அன்பு கலந்த வரவேற்பையும்
, சிறந்த திட்டமிடலுடன் கூடிய ஒழுங்குபடுத்தலையும் செய்திருந்தார்.
நேர்த்தியான தொடர்பாடலுடன் கூடிய ஒருங்கிணைப்பு திருவாளர் ந.பிரசன்னாவினால் வழங்கப்பட்டது.
பாதணி வழங்கப்பட்டதற்கு மேலதிகமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதன் நோக்கம் மற்றும்
கல்வியால் மாணவர்கள் எவ்வாறு சொந்தக்காலில் நிற்கலாம் என்பதை கலாநிதி து. பிரதீபன்
கதைகளுடன் மாணவர்களுக்கு விளக்கினார்.
மகிழ்தலுடன் கூடிய கற்றற் சூழல் மாணவர்களுக்கு ஏன் அவசியம் மற்றும் ஏற்றத்தாழ்வில்லா
மாணவர் மையக் கல்வி பற்றி பல ஆழமான சித்திக்கத்தக்க விடயங்களை கலாநிதி த.விவானந்தராசா
இனிமையாக எடுத்துரைத்தார். மேற்கொண்டு திருவாளர் அ.சித்தாத்தன் தோல்வியில் இருந்து
கற்றுக்கொண்ட பாடங்கள் வெற்றிப் பாதைக்கு எவ்வாறு உதவும் என்பதை தன்னுடைய அனுபவமூடாக
திறம்பட வெளிப்படுத்தியிருந்தார்.
அதிபராலும், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் வட்ட அங்கத்தவர்களாலும் மாணவர்களுக்கான
பாதணிகள் வழங்கப்பட்டன. ந.பிரசன்னா நன்றியுரை வழங்க பாடசாலைகளுக்கான நான்காவது திட்டம்
இனிதே நிறைவுற்றது.
மேலதிகமாக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க புலமைப் பரிசில்
பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட வகுப்புக்களுக்கான செலவில் ஒரு மாதத்திற்கான
அனுசரணையினை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதைவிட அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து மாணவர்களையும் பெற்றோர்களையும்
ஊக்கப்படுத்தும் உரைகளை ஆற்றுவதற்கான வேண்டுகோளை விடுத்திருத்து அதற்கான ஏற்பாடுகளையும்
மேற்கொள்வதாக கூறியுள்ளனர்.
ஊக்கவுரைகள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மத்தியில் அதீத வரவேற்ப்பைப் பெற்றிருந்தது.
0 Comments:
Post a Comment