மட்டக்களப்பில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் தீவிர நடவடிக்கை.
இந்த மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணியின் மீளாய்வு விசேட கூட்டம் இக்குழுவின் தலைவியும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தின் பங்களிப்புடன் வியாழக்கிழமை (11) இடம்பெற்றது.
கொரோணா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவிருப்பதால் பாடசாலைகளில் டெங்கு நோய் பரவாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும் இதற்கான நடவடிக்கையில் பாடசாலை சார்ந்த நிருவாகிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
மேலும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இம் மாவட்டத்தில் உள்ள அரச அலுகங்களில் டெங்கு நோய்த் தடுப்புக்கான பொறுப்புக்களை அந்தந்த அரச தலைவர்கள் ஏற்க வேண்டுமெனவும் சகல அரச அலுவலகங்களும் மற்றும் பாடசாலைகளும் வாரத்தில் அரை நாள் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் இன்றைய மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது தவிர பாவனையில் இல்லாத அனைத்து குழாய் கிணறுகளும் முறையாக சீல் செய்யப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் எதிர் வரும் காலங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கமைய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்படுவதுடன் சுற்றாடல் பொலிசாரை டெங்கு ஒழிப்பபணிகளுக்கு கூடுதலாக பயன்படுத்துவதெனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட செயலணிக் கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிக சிங்க, மட்டக்கப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜேசேகர, ஆளுனரின் செயலாளர் பிரஸ்ஸன்ன மத நாயக, பதில் பிராந்திய சுகாதார பணிப்பளர் டாக்டர் எஸ். நவ லோஜிதன், உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பொதுச் சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment