2 Jun 2020

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை - அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கண்டனம்.

SHARE
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரிய  காலத்தில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை - அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கண்டனம்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் ஓய்வூதிய கொடுப்பனவினை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வேதனைக்குமுரிய செயலுமாகும் என அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்க தலைவர் ஏ.ஜீ.முபாறக் கடிமொன்றினை கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தொழிற் சங்கத்தின் தேசிய ஊடகச் செயலாளர் உ.உதயகாந்த் ஊடக அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கமு/அக்/ரீ.பீ.ஜாயா வித்தியாலயம், அட்டாளைச்சேனையில் கடமையாற்றி 2019 ஜூன் மாதத்தில் 60 வயதினை பூர்த்தி செய்து பதவியில் இருந்து ஓய்வு பெற்ற திரு ஜே.அப்துல் றகீம் என்பவர், ஓய்வு பெற்று 11 மாதங்கள் தாண்டியும் ஓய்வூதிய கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை ஓய்வூதிய திணைக்களத்திற்கு அனுப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும், இதற்கான காரணம் அவரது கோவை சரியான முறையில் பராமரிக்கப்படாமையாகும். உரிய ஆவணங்கள் ஓய்வூதிய திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு மேலும் சில மாதங்கள தேவைப்படலாம் எனத் தெரியவருகின்றது. தனக்குரிய ஓய்வூதிய கொடுப்பனவிற்கான ஆவணங்களை ஓய்வூதிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும்பொருட்டு, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் தினசரி அலைந்து திரிகின்றார்.

மேலும் பலரது சுயவிபரக் கோவைகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கலாம் எனவும் அவர்களும் ஓய்வூதியம் பெறும்போது இவ்வாறான தாமதத்தினை அடையலாம் எனவும் சங்கத்தின் தலைவர் குறித்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, 60 வயதினை தாண்டிய ஒருவர், வயதானவர் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பார் எனக் கருதி ஓய்வு பெற வைக்கப்பட்டவர், மாதச் சம்பளம் நிறுத்தப்பட்டவுடன், அடுத்த மாதத்தின் வாழ்வாதார செலவிற்கு என்ன செய்வார் என்ற சிந்தனையில்லாமல், பொறுப்புமில்லாமல் நடந்து கொள்ளும் அதிகாரிகள் தொடர்பில் முறையான நடவடிக்கை மேற்கொள்ளாமையே இவ்வாறான தாமதங்களுக்கு இன்னுமொரு காரணமாகும். இவ்வாறான அதிகாரிகளின் சம்பளம் இடைநிறுத்தப்பட்டு, ஓய்வூதியம் பெறவேண்டியவரின் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப் பெற்றதன் பின்னரே அவருக்கான சம்பளம் வழங்கப்படல் வேண்டும். அப்போதுதான் இவ்வாறானவர்கள் ஒரு மாத சம்பளம் கிடைக்காதவர்களின் வலியை உணருவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், முறையாக பதில் நிருவாக உத்தியோகத்தராக நியமனம் பெற்று வந்தவரை கடமையை பொறுப்பெடுக்க விடாமல் தடுக்கப்பட்டமை, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றியமை, முறையான பதில் நிருவாக உத்தியோகத்தர் நியமனம் இல்லாமலயே நிருவாக உத்தியோகத்தர்களாக கடமையாற்றியமை, இடமாற்ற கட்டளை பெறுபவர்களை தன்னிச்சையாக விடுவிக்காமல் வைத்திருக்கின்றமை, சேவையில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட இடமாற்றம் பெற்று வந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு 06 மாதங்களுக்கு மேல் கடமைப் பொறுப்புக்கள் வழங்காமை, சேவைமூப்பு, சிரேஷ்டத்துவம் போன்றன கவனிக்கப்படாமல் கண்காணிப்புப் பொறுப்புக்கள் வழங்கப்படுகின்றமை போன்ற பல முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் காணப்படும் சீர்கேடுகள் முற்றாக களைவதற்கு தேவையான முழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதியுத்தம ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் "ஒய்வு பெற்ற ஒருவர் மறுநாள் ஓய்வூதியம் பெறவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ள இக்கால கட்டத்தில், எக்காரணம் கொண்டும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் தாமதமடையாமல் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இவைகள் தொடர்பில் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம், கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கடிதத்தில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களையும், சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து அலுவலகங்களின் தேவையான உத்தியோகத்தர்களையும் தங்களது முன்னிலையில் அழைப்பித்து தேவையான அனைத்து வேலைகளையும் உடன் நிறைவு செய்து உடனடியாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு உரிய உத்தியோகத்தரின் ஆவணங்கள் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் உள்ள அனைத்து சுயவிபரக் கோவைகளையும் பரிசீலனை செய்து, ஒரு உத்தியோகத்தர் மரணம் மற்றும் இதுபோன்ற சம்பவங்களின் போதும், சாதாரண சந்தரப்பங்களிலும் ஓய்வு பெறும்போது, உடனடியாக ஓய்வூதியக் கொடுப்பனவு, மரணப்பணிக்கொடை போன்றனவற்றை வழங்க கூடியதாக்கி வைத்தல் வேண்டும் எனவும், குறிப்பிட்ட உத்தியோகத்தரின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தாமதமானதற்கு காரணமான உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்தல் வேண்டும் எனவும் இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: