21 Jun 2020

கட்டுரை : இன்று சர்வதேச யோகா தினம். யூன் -21

SHARE
(சக்தி)


கட்டுரை : இன்று சர்வதேச யோகா தினம். யூன் -21
பன்னாட்டு யோகா நாள் (International Yoga Dayஆண்டு தோறும் யூன் 21 ஆம் திகதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.


ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக வருடத்தில் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐ.நா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

வருடத்தில் யூன் 21 ஆம் திகதியையும் அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். பின்னர் அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல உலக நாடுகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பரிந்துரையை ஆதரித்தன.

பின்னர் 2014 டிசம்பர் 11 அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை யூன்; 21 ஆம் திகதியை “பன்னாட்டு யோகா நாளாக” அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

முதல் சர்வதேச யோகா தினம்.

முதன் முறையாக 2015, யூன் 21ஆம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நாமும் நம் உடல் ஆரோக்கியத்தைப் பேண யோகா செய்து உடலை திடமாக்கு வேண்டும்.

எண்ணங்களின் சிதறல்களைக் ஒருங்கிணைக்க, கற்பனை வேகத்தை மட்டுப்படுத்த, சிந்தனை சிதறல்களை தடுத்து நிறுத்த, நாலா பக்கமும் ஓடும் மனதை ஒரு ஓடுபாதைக்குள் கொண்டுவர யோகா சிறந்த வழிகாடியாக உதவுகின்றது. எனலாம். அதுவே வழி நடத்தவும் செய்கிறது. மனதையும் உடலையும் நல்ல நிலையில் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் யோகா துணைநிற்கிறது. சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் யோகாவைப் பற்றி அதிகளவு விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதன் பலன்கள் பற்றியும் அதிகளவு பேசப்படுகிறன.

பொதுவாக ஓய்வு இல்லாமல் ஓடி களைத்து கொண்டிருக்கும் மனம் சற்றே இளைப்பாற, கொஞ்சம் நின்று நிதானிக்க, அமைதி கொள்ள யோகா உதவி செய்கின்றது எனலாம்.

யோகாவே சிறந்த வழி 

மனம் பரபரக்கும் போது உடல் அதிர்கிறது. மனம் பதைபதைக்கும் போது உடலில் நரம்புகள் துடிதுடிக்கின்றது. மனம் சிதறும் போது உடலில் வேதியியல் மாற்றங்களின் சம நிலை கெடுகிறது. மனம் சீராக இல்லை எனில் உடல் நிலையும் சீர்கேடு அடைகிறது. இந்த நிலையை மாற்றவும், ஒழுங்கு படுத்தவும், யோகாவே சிறந்த வழிவகையாக அமைந்துள்ளது.

மனமும் உடலும் ஓய்வு.

மரம் ஓய்வு எடுக்க விரும்பினாலும் காற்று அதை விடுவதில்லை என்பது போன்று உடல் ஓய்வு எடுக்க விரும்பினாலும் மனம் அதை விடுவதில்லை. இயற்கை தூக்கம் என்ற ஒன்று வைத்து இருப்பதால் பிழைத்தோம் இல்லா விட்டால் அவ்வளவு தான். ஆயினும் அப்போதும் கனவுகளை அது நல்லதோ கெட்டதோ அள்ளி வந்து கொட்டுகிறது மனம். அந்த மனம் ஓய்வு எடுத்தால்தான் உடல் பூரண ஓய்வு எடுக்க முடியும். சிந்தனைகளால், எண்ணங்களால், கவலைகளால், பிரச்சனைகளால், கற்பனைகளால், கனவுகளால் ஓடி ஓடி திரிந்து அலைந்து களைத்து போகும் மனதை ஓய்வுகொள்ள செய்ய ஒரே எளிய வழிமுறை யோகா மட்டுமே எனக்கருதலாம்.

மனதை ஒழுங்குபடுத்த எண்ணம் கடுமையான வேகத்தில் சுழன்று கொண்டே இருக்கிறது. எண்ணங்கள் மலர்வதும் உதிர்வதுமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நிற்க நேரமில்லை. அது இது என்றில்லை ஏதேதோ மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. “அங்காடி நாய் போல் அலைகிறாய் மனமே என அலுத்துக் கொண்டார் பட்டினத்தார்.” “சினம் இறக்க கற்றாலும் சித்தி  எல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாய் ஏன் பரபரமே என்பார் தாயுமானவர்.” மனமே எல்லாவற்றுக்கும் மூலமாகவும் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனை ஒழுங்கு படுத்தி விட்டால் மற்றவற்றை எளிதில் சரிபடுத்தி விடலாம்.

யோகாவே துணை மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்க காரணம். மனதை புலன்களின் கட்டுப்பாட்டில் நாம் விட்டு வைத்து இருப்பதுதான். புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்து மனதை விடுவித்து விட்டால். மனம் நம்மை தன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விடும். மனத்தை புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க யோகாவே துணை செய்யும். ஆகாவே யோகாவால் புலன்களை ஒழுங்குப்படுத்தலாம், மனதை நேர் வழியில் திருப்பலாம், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். அவ்வளவு தானா என்றால்?

தொட்டது பொன்னாகும் உடலும் மனமும் மட்டுமா வாழ்க்கை உயிர் அல்லவா முக்கியம். அந்த உயிர் சக்தியை நலமாய் வளமாய் காக்க யோகா முக்கிய பங்காற்றுகிறது. உடல் உள்ளம் உயிர் மூன்றையும் யோகா மூலம் இயற்கையோடு இசைந்த நிலைக்கு ஒழுங்கு படுத்திவிட்டால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். யோகா படிப்பு அல்ல அது பயிற்சி. அதை தினமும் செய்து வரவேண்டும். துலக்க துலக்க பளிச்சிடும் பாத்திரம் போல் யோகா தொடர தொடர தேகம் ஒளிவீசும். மனம் மாசற்ற ஜோதியாகும். பின்னர்; சலசலத்து கொண்டிருந்த வாய் மௌனமாகும் வார்த்தைகளில் மென்மையும் மேன்மையும் வரும். சொற்களில் அன்பு பெருகும்.

தியாக மனப்பான்மை நாக்கு ருசிக்கு சாப்பிடும் பழக்கம் ஒழியும். உடல் நலத்திற்கே சாப்பாடு என்பது புரியும். விதவிதமாய் முன்னால் கொண்டு வந்து அடுக்கினாலும் உண்ணத் தோணாது. ஆவல் மறையும் அளவுமுறை புரியும். வாழ்வின் அர்த்தம் தெரியும். சுயநலம் போகும் தியாக மனப்பான்மை வரும். வாரி குவிக்க அல்ல வாழ்க்கை வாரி வழங்க என்ற தெளிவு வரும். யோகா நம்மை மேல் நிலைக்கு உயர்த்தும் மார்க்கம். அது வழிபாடு அல்ல வாழ்க்கை முறை ஒரு காலத்தில் இது தான் யோகா என்று தெரியாமலேயே அது நம் வாழ்வோடு பிணைந்து இருந்தது.

கர்மயோகா காலையில் வாசல் தெளிப்பதில் கோலம் போடுவதில் யோகா இருந்தது. கோலமாவை எடுப்பதிலேயே சின்முத்திரை இருந்தது. வீடு மெழுவது, அரிசி குத்துவது, மாவாட்டுவது எல்லாவற்றிலும் யோகா இருந்தது. ஆண்கள் ஏர் பிடிப்பது, ஏற்றம் மிதிப்பது, மல்யுத்தம் செய்வது, கம்பு சண்டை போடுவது எல்லாவற்றிலும் யோகா இருந்தது அன்றாட கடமைகளுடன் இருந்த யோகாவை கர்மயோகம் என்றார்கள்.

ஞான யோகம் ஈசனை வணங்குதல், விரதங்கள், மலையேறுதல், அடி பிரதக்ஷணம் அங்கப்பிரதட்சணம், பிரகாரங்களை வலம் வருதல் எல்லாவற்றிலும் யோகா இருந்தது கோயிலில் பாடுதல் ஆடுதல் இசைக்கருவிகளை வாசித்தலில் கூட யோகா இருந்தது. வழிபாட்டுடன் இணைந்த இதை பக்தி யோகம் என்றார்கள் கொஞ்சம் மேல்நோக்கி பார்த்தால் ஜபம், தவம், ஆசனம், தியானம் என்று உயர்ந்தால் ஞான யோகம் என்றார்கள். உத்திராட்ச மாலை உருட்டிக் கொண்டு மந்திரம் உச்சரித்தல், ஆயிரத்தெட்டு முறை காகிதத்தில் ராமஜெயம் எழுதுதல் ஆகியனகூட மனதை ஒருபுள்ளியில் குவிக்கும் யோகமே.

இல்லறத்தார்க்கு யோகா இவற்றில் பல நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தது தான். இன்றும் யோகம் என்பது சாமியார்கள் சமாச்சாரம் என்கிற நினைப்பு பரவலாக இருக்கிறது. உண்மையில் அது இல்லறத்தார்க்கு தான் அதிகம் தேவைப்படுகிறது. சந்நியாசிகளை விட சாமான்யர்களே அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் யோகா சாதரண மக்களுக்கே அவசியமாகும்.

குண்டலினி யோகா ஒருவர் கற்க வேண்டிய காலங்களை வீணடித்து விட்டு தாமதமாக விழிப்புணர்வு பெற்று அதிகம் வருத்தப்பட்டு இருக்கின்றார்கள் பின்னர் சுயமாக முயற்சி செய்து சாண் ஏறி முழம் சறுக்கி சங்கடப்பட்டு கடைசியில் வராது. பின்னர் இருப்பினும், எளிய முறை குண்டலினி யோகா பயிற்சி பெறலாம். அதில் உடல் உள்ளம் உயிர் மூன்றுக்குமான பயிற்சி உண்டு. இப்போது அதுவே பெரும்பாலானவர்களுக்கு இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் இருக்கிறது. இந்நிலையில் இந்த யோகா தினத்தில் குரு தெட்சிணாமுர்த்தியை, பதஞ்சலி முனிவரை, சித்தர்கள், ரிஷிகள், யோகிகள், முனிவர்கள், மகான்கள், முதாதையார், பெற்றொர் அனைவரையும் நினைவு கூர்ந்து வணங்குவோம். தினமும் யோகா செய்து உடல் உள அரோக்கியத்தைப் பேணுவோம்.
SHARE

Author: verified_user

0 Comments: