21 Jun 2020

கட்டுரை - உலக தந்தையர் தினம் இன்று (ஜூன் 21)

SHARE
(சக்தி)

கட்டுரை - உலக தந்தையர் தினம் இன்று (ஜூன் 21)
“அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்” “அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை”  எனவும் கவிஞர் கண்ணதாசன் தமது கவித்துவத்தின் மூலமான பாடல் வரிகள் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளமை அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

குடும்பத்தைக் கட்டிக் காவல் செய்து பேணி பாதுகாத்து வருபவர்தான் தந்தை. ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எவ்வாறு தாய்க்கு இருக்கிறதோ, அதுபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு இன்றியமையாததாக அமைகின்றது.

தமது குடும்பம் யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதற்காக குடும்பத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் தேயும் தந்தையின் இஸ்த்தானத்தையும், அவர் படும் வேதனைகளையும் அறியாத பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  

உலகம் முழுவதும் “அன்னையர் தினம்” என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், “தந்தையர் தினம்” என்பது 1910ஆம் ஆண்டில் இருந்துதான் கொண்டாடப்பட்டு வரப்படுகின்றது. அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார்.  

அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணம் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் இற்குத் தோன்றியது.

அதன் அடிப்படையில், அன்னையர் தினத்தைப்போல் தந்தையர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார். அவரது கோரிக்கையை, அப்போதைய ஸ்போக்கேன் நகர ஆளுனர்; அங்கீகரித்தார். அதன் பின்னர்தான், தந்தையர் தினமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் படி 1910 ஆம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது உலகம் முழுவதும் 52 நாடுகளில் ஜூன் மாதம் 3 வது ஞாயிற்றுக்கிழமை “தந்தையர் தினம்” கொண்டாடப்படுகிறது. வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வரப்படுகின்றன.

தற்போதைய இயந்திர உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், தமது குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளிலும், நாட்டிற்குள்ளேயே வெளி மாகாணங்களிலும், உழைத்து கொண்டிருக்கின்றனர். இலங்கையைப் போன்ற நாடுகளில் குடும்பத்துடன்  பல தந்தைமார்கள் இருந்தாலும், காலையில் குழந்தை கண்விழிக்கும் போது வீட்டை விட்டு வேலைக்கு புறப்படும் தந்தைமார்கள், இரவு குழந்தை தூங்கும் நேரத்தில்தான் வீடு திரும்புகிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகளுடனான உறவை தந்தையர்களின் உழைப்பு பிரிக்கிறது எனலாம்.

இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் தனது சிறு வயது குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்து விளையாடச் சொல்லிவிட்டு பல தந்தைமார்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், அந்த குழந்தைகளே விளையாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக தனது தந்தையே, அருகில் இருந்து விளையாட மாட்டாரா? என்று ஏங்குகிறார்கள். பொருளாதார தேவை அந்த அளவுக்கு குடும்ப சூழ்நிலையை மாற்றிவிடுகிறது. இருந்தாலும், தந்தை மீதான பாசம் அந்த குழந்தைகளுக்கு என்றென்றும் குறைந்து போய்விடுவதில்லை.

சிறு வயதில், தாய் தந்தையரின் கை விரலைப்பிடித்து தத்தித் தத்தி நடக்க பழகும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் முதுமை காலத்தில், அவர்களின் நடை தளரும்போது, கையை பிடித்து நடக்க உதவுவதுதான், தாய் தந்தைக்கு அவர்கள் ஆற்றும் செஞ்சோற்றுக் கடனாக இருக்க முடியும். அதற்கான உறுதியை இன்றைய தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்க வேண்டும்.


எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை தனது குடும்பத்திற்கு வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தம்பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம்தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள் உள்ளார்கள். இராத்தூக்கம் பகல் தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள் அனேகம்பேர் இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து  கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனை சிறிது சிந்தனைகளை ஓடவிட்டுப் பார்த்தால் புரியும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தம்மை ஆளாக்கபட்ட துயரங்கள் கொஞ்சமாவது உங்கள் கண்களைக் ஈரமாக்கும். இந்நிலையில் தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தையர் தினம் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாட்டங்கள் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இன்றைய தினம் குழந்தைகள் தங்களது தந்தையர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, பரிசு கொடுத், முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கலாம். பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். 


சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயற்பட வேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.


பத்து மாதங்கள் தாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய்  இருந்து சந்தோஷமும், பெருமையும் தருபவர் தந்தை. வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம்  தந்தை. “தான் பட்ட கஷ்டம்”, என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர் தந்தை. 

தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார்.  பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை  வெளிக்காட்டாமல் துன்பத்தின் சாயல் தனது பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே தன் குழந்தைகளுக்காக  இராத்தூக்கம், பகல் தூக்கம் இன்றி அல்லும் பகலும், பல தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்களை நாம் போற்ற வேண்டும்.

இன்றைய அவசர உலகில் நாம், நம் தந்தையருக்கு தள்ளாடும், வயதில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்கின்றோமா என்ற கேள்வியை நம்முள்  நாமே கேட்டுப் பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற்பணியாகும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல... என்றுமே  தந்தையருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மனதில் இருத்திக் கொள்வோம். இந்நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு  வாழ்த்துவோம்! வணங்குவோம்!
SHARE

Author: verified_user

0 Comments: