13 Nov 2019

கட்டுரை : கார்த்திகை 16, இலங்கைத்தீவின் சிறுபான்மை மக்களுக்கான ஓர் நெருப்புக்குளியல்.

SHARE
(பாரதிகுமரன்)


கட்டுரை : கார்த்திகை 16, இலங்கைத்தீவின் சிறுபான்மை மக்களுக்கான ஓர் நெருப்புக்குளியல்.
காரத்திகை 16, இலங்கைத்தீவின் சிறுபான்மை மக்களுக்கான ஓர் நெருப்புக்குளியல். குறிப்பாக தமிழ் மக்களுக்கு அதிலும் விசேடமாக கிழக்குத் தமிழ் மக்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை. இனவாதம், மதவாதம் மற்றும் பிரதேசவாதத்தின் அனல், கொட்டும் மழையையும் குளிர்காலத்தையும் தாண்டி அரசியல்வாதிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் சற்றுக் குளிர்காய வைத்துள்ளது. 
ஆரம்பத்தில் படித்த சிங்களத்தேசியவாதிகளின் வாக்குகளை பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்~வும், பாமர சிங்களமக்களினதும் முஸ்லிம் சமூகத்தினதும் வாக்குகளை புதிய ஜனநாயக முன்னணியின் அன்னச் சின்னத்தின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் தம்வசப்படுத்தியிருந்தனர். ஆனால் காலப்போக்கில் சஜித் பிரேமதாஸவும் தன்னை முழுமையான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாக சிங்களத்தேசியவாதிகளுக்கு இனங்காட்டியதையடுத்து ஏற்பட்ட களச்சமநிலையை ஈடுசெய்ய இரு சாராரினாலும் தமிழ் வாக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளன. சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் செடிகொடிகளாகவும் கிள்ளுக்கீரைகளாகவும் கருதப்பட்ட தமிழ் வாக்குகள், இன்று தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருப்பது காலச்சக்கரத்தின் சுழற்சியாகும்.
கொள்கையின் வழிநின்ற வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் 13 அம்சக்கோரிக்கை அடிப்படையில் ஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்ட போதும், அது தற்கால அரசியல் சித்தாந்தத்திற்கு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதுடன் தமிழ் மக்களின் கனவை வெளிப்பட வைத்ததைத்தவிர வேறு எந்த வகையிலும் அது தமிழ் மக்களின், குறிப்பாக கிழக்குத் தமிழ் மக்களின், எதிர்காலத்திற்கு நன்மைபயக்காது. அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு தமது மக்களிடம் சென்று இந்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறமுடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் ஏற்படுத்தியிருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளாக தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து தீர்மானம் மிக்க அரசியலை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டையும் தட்டிக்கழிக்க முடியாது.

ஒருபுறத்தில் கிழக்கின் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயற்பாட்டை ராஜபக்~க்கள் கனகச்சிதமாக ஆரம்பித்துள்ளார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பிள்ளையான் விடுதலை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலக தரமுயர்த்தல், முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை ஒழித்தல், பிரதான முஸ்லிம் கட்சிகளை ஓரம்கட்டல், தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி என முழுக்க முழுக்க கிழக்கு தமிழ் மக்களின் உள்ளத்தில் வடுக்களாக இருந்த உணர்வுகளைத் தட்டியெழுப்பியுள்ளார்கள். இவை கிழக்கு தமிழ் மக்களின் காதுகளிலே தேனாகப் பாய்ந்தாலும் இவற்றின் பின்னணி பற்றியும் யதார்த்தத்தன்மை பற்றியும் சற்று ஆராய்வது சாலச்சிறந்தது. 

குற்றங்களின் அடிப்படையில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரும் மிகமுக்கிய துணை இராணுவக்குழுத் தலைவர்களும் தான் பதவியேற்றதும் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்ததன் முலம் இந்த நாட்டின் சட்டத்துறையும் நீதித்துறையும் மீண்டும் ராஜபக்~க்களின் சட்டைப்பைக்குள் சிறைப்படுத்தப்பட போகின்றதா என்ற கேள்வி ஜனநாயக சிந்தனையுள்ள எவருக்கும் எழுவது நியாயமானதே. மேலும் இந்த அரசியல் ரீதியான விடுவிப்புகள் மீண்டும் ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன், அந்தக்குழுக்களுடன் சம்பந்தப்படாத அனைத்து சாதாரண தழிழ் மக்களுக்கும் வெளிப்படையான அச்சநிலை தோற்றுவிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. 

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலக தரமுயர்த்தல் விவகாரம் இன்று நேற்று தொடங்கியதல்ல. அனுமதிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் பல தசாப்தங்களாக அமுலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டதற்கும் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளே முழுப்பொறுப்பாளிகளாவர். ஆனால் அவர்கள் அப்படி செய்வதற்கு தேவையான அரச அதிகாரத்தை வழங்கியதுடன், தமிழ் மக்களை ஒடுக்கும் சிங்களப்பேரினவாதத்தின் செயற்பாட்டுக்கு முஸ்லிம்களை மிகமுக்கிய கருவியாகப் பயன்படுத்தியதில் ராஜபக்~க்களின் 10 வருட ஆட்சியும் முக்கிய பங்காற்றியுள்ளது. அதுமாத்திரமன்றி ராஜபக்~க்களின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2008–2012 காலப்பகுதியில் தமிழர் ஒருவரை முதலமைச்சர் பதவிக்கு நியமித்திருந்தாலும் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் 2012–2015 காலப்பகுதியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் பதவிக்கு இதே ராஜபக்~க்கள் நியமித்திருந்தார்கள் என்பது வரலாறு. இவையெல்லாவற்றையும் புறந்தள்ளி அவற்றை மறந்து கிழக்கு தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது ராஜபக்~க்களின் எதிர்பார்ப்பு. 

இந்தத்தேர்தலின் மிகமுக்கிய பேசாபொருளாக இருப்பது சிறுபான்மை மக்களில், குறிப்பாக முஸ்லிம் மக்களில்;, முற்றிலும் தங்கியில்லாத அல்லது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரம்பேசும் சக்தியாக உருவெடுக்காமல் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியதான சிங்கள பௌத்த பேரினவாத அரசை நிறுவுவதாகும். அந்த வகையில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை ஒழித்தல் மற்றும் பிரதான முஸ்லிம் கட்சிகளை ஆட்சியிலிருந்து ஓரம்கட்டல் என்பன தென்னிலங்கையின் பிரசாரங்களில் மட்டுமன்றி கிழக்கு தமிழர் முன்னிலையிலும் முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளது. நீறுபூத்த நெருப்பாக கிழக்கு தமிழர் மனங்களில் இருந்த விடயத்தை இப்போது ராஜபக்~க்கள் தமது இனவாதப் பிரச்சாரம் முலம் கொழுந்து விட்டு எரியச்செய்யப் பகீரதப்பிரயத்தனம் செய்துள்ளார்கள். அதிலே தமிழ் மக்களும் பேரம்பேசும் சக்தியாக உருவெடுக்கக்கூடாது என்ற ராஜபக்~க்களின் உள்நோக்கமும், கிழக்கு மண்ணை சிங்கள பௌத்த மயமாக்கும் பேரினவாத செயற்பாடும் கிழக்கு தமிழர்களின் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மிகச்சிறந்த ஆதாரமாக 2012 இல் ராஜபக்~ அரசாங்கத்தில் கருவாக்கம் பெற்று, 2017 இல் ரணில் அரசால் அமுலாக்கப்படவிருந்த மாதுறுஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டத்தைக் குறிப்பிடலாம். நெஞ்சில் உரத்துடனும் நேர்மைத்திறனுடனும் செயற்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைசார் வல்லுனர்களாலும் கல்விமான்களாலும், கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகளின் தலையீட்டுடன் தற்காலிகமாக அத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டமை கிழக்குத்தமிழ் மக்கள் அறிந்திராத ஒரு விடயம். துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள அரசு மாதுறுஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டத்தை முன்வைத்து 15,500 ஹெக்டேயர் பாய்ச்சல் நிலத்துடன் கூடிய 44,000 ஹெக்டேயர் நிலப்பரப்பை கையகப்படுத்தப்படுத்த எடுத்த பெருமுயற்சியே இந்த மாதுறுஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டமாகும்.

திட்டப்பகுதியில் 93 வீதம் நிலப்பரப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே வசிப்பதாகக் கூறப்படும் 800 குடும்பங்களுடன் சேர்த்து, 11800 குடும்பங்களை குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏற்கனவே வசிப்பதாகக் கூறப்படும் இந்த 800 குடும்பங்களில், 2012ம் ஆண்டு ஒக்டோபரில் மஹாஓயா பிரதேச செயலகம் வழங்கிய தற்காலிக அனுமதிப்பத்திரத்தின் கீழ்; 600 சிங்கள விவசாயிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த தமிழ் விவசாயிகளை திட்டவரைபில் சட்டவிரோத குடியேறிகளாகக் காட்டியிருப்பது கிழக்கு மண்ணை சிங்கள பௌத்த மயமாக்கும் பேரினவாத செயற்பாட்டின் உச்சமாகும். 

6,969 மில்லியன் ரூபாய்கள் சீனக்கடனுதவியுடன் செயற்படுத்தப்பட இருந்த இத்திட்டத்தின் ஒப்பந்தம் ஐப்பசி 26, 2016 இல் கைச்சாத்திடப்பட்டு அமுலாக்கம் தடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இத்திட்டம் ராஜபக்~ அரசாங்கத்தில் அமுல்படுத்தப்படும் என்பதுடன், பெருகிவரும் முஸ்லிம் சனத்தொகையும் குடியேற்றப்படும் சிங்கள சனத்தொகையும் சேர்ந்து கிழக்கில் தமிழர் பரம்பலைக் குறைத்து தமிழ் முதலமைச்சர், தமிழ் ஆளுனர் போன்றவை மிகவிரைவில் எட்டாத கனியாக மாறிவிடும் என்பதும்  கிழக்கின் தமிழ் புத்திஜீவிகளாகத் தம்மைக் காட்டிக்கொண்டு அரசியல் செய்யும் எவரும் மக்களுக்குத் தெரிவிக்காத ஒரு கசப்பான உண்மை. 

ராஜபக்~க்களின் கிழக்குப்பிரச்சாரத்தால் சற்று கதிகலங்கிப் போயுள்ளது கண்கூடு. அதை ஈடுகட்டும் வகையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு, வடகிழக்குப் பகுதிகளின் மறுசீரமைப்பு, சமூகமேம்பாடு, காணிப்பிணக்குகளுக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு, மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விடயத்துக்கான தீர்வு, போரால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு, மகாவலி மற்றும் வனவிலங்கு திணைக்களங்களின் மீதான கட்டுப்பாடு, வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தோருக்கான மீள்திரும்பல் பொறிமுறை, அரச ஆதரவு குடிப்பரம்பல் மாற்றத்தைத் தடுத்தல், இன சமுகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலான வரலாற்றுப் பாடத்திட்டத் திருத்தம் போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பது தமிழ் மக்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை தெளிவாகக் காட்டிநிற்பதுடன் தமிழ் அரசியல் தலைமைகளின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருப்பதையும் தெளிவாகக்காட்டி நிற்கின்றது. அதேசமயம் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் மகிந்தவாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் சஜித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தமிழர்களுக்கு ஈழத்தை வழங்குவதற்கு ஒத்த அதிகாரப்பகிர்வினை வழங்கப்போகின்றார்கள் என்று சிங்களப்பெரும்பான்மை மக்களிடத்திலே பிரச்சாரம் செய்துவருவதிலிருந்து ராஜபக்~ அணியினர் உண்மையிலேயே என்ன விதமான அபிவிருத்திகளையும் அரசியல் தீர்வுகளையும் கிழக்குத் தமிழர்களுக்கு வழங்கப்போகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இது தவிரவும் கடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியானது இலங்கையின் ஜனநாயக நீரோட்டத்தை சற்று வளப்படுத்தி வன்செயல்களின் குறைப்பு, ஊடக சுதந்திரம், மாற்றுக்கருத்தாளர்கள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்களின் நிறுத்தம், நீதித்துறையின் சுதந்திரம், சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடு போன்ற அனேக விடயதானங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 

கிழக்கில் தமிழ் மக்கள் மீதான பாரபட்சமான செயற்பாடுகள் வெளிவருவதற்கும் அரச நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளை தட்டிக்கேட்பதற்கும் சமூக வலைத்தளங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியதும் இதே ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இவை எல்லாவற்றையும் தாண்டி கிழக்குத்தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி மீதான சந்தேகமும் அதிருப்தியும் இல்லாமலில்லை. அதற்கான காரணங்கள் பற்றி சற்று ஆராய்வது அவசியமாகும்.

முதலில் தமிழ்மக்களின் அமோக ஆதரவோடு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிபீடம் ஏறியும் தமிழ்மக்களின் உரிமைசார் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்கின்ற தமிழ்மக்களின் அதிருப்தியும் ஏமாற்றமும். உண்மையில்; காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் தென்னிலங்கையின் வடிகட்டிய இனவாதிகளின் முன்னிலையில் அவற்றை சந்தைப்படுத்த முடியாமல் போனது தூரதிடமே. 

அதுமட்டுமன்றி அரசியல்தீர்வு விடயமானது வெண்ணெய் திரண்டு வரும் போது தாளி உடைத்த தென்னிலங்கை இனவாதிகளின் செயற்பாடுகள் பலவற்றினால் தடைபட்டுப் போயிருந்தாலும், ஏலவே ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மீதான தமிழ்மக்களின் நம்பிக்கையீனமும்  தமிழ் அரசியல் தலைமைகளின் மீது தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் அவநம்பிக்கையும் அரசியல்தீர்வு விடயத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்தவகையில், சஜித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை மக்களுக்கான தீர்வுகளை வெளிப்படையாக முன்வைத்து தென்னிலங்கை இனவாதிகளின் முன்னிலையில் அவற்றை சந்தைப்படுத்திக் கொண்டிருப்பது உண்மையில் வரவேற்கத்தக்க, தமிழ் மக்கள் தமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டிய விடயமாகும்.

அடுத்து கிழக்குத்தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பில் நோக்கும் போது 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தவித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்னும் மகிந்தவாதிகளின் கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. பல பில்லியன் ரூபாய்கள் செலவில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டிருப்பதை மாவட்ட செயலகத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான சுகாதார சேவையை எடுத்துக்கொண்டால் ராஜபக்~க்களின் கடந்த ஆட்சியின் போது ஜைக்கா திட்டத்தினூடான களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் ஒரு கட்டடத்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவுக்கான ஆரம்பக்கட்டடத்திற்கான அரைகுறை நிதியையும் தவிர வேறு எதனையும் குறிப்பிட்டு செய்திருக்கவில்லை. அதேசமயம் சிறிய மீன்களைப்போட்டு பெரிய மீன்களைப் பிடித்த கதையாக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகராட்சியால் கிழக்கின் சுனாமி பாதிப்பை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உதவியாக கொண்டு வரப்பட்ட முழுமையான பாரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கட்டடத்தை அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லுமாறு மகிந்த ராஜபக்~ நேரடியாகப் பணித்து மட்டக்களப்புக்கு அந்தப்பாரிய நிதியிலான கட்டடம் வருவதை தடுத்திருந்தார். 

அது மட்டுமல்லாது மீண்டும் அவுஸ்திரேலியாவின் கொடையாளிகள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கட்டடத்திற்கு உதவ முன்வந்த நிலையில் அத்திட்டத்தின் நிதியையும் குறைத்து தற்போது கிடைத்திருக்கும் அரைகுறை கட்டடத்திற்கும் வித்திட்டது சாட்சாத் ராஜபக்~க்களின் இதே அரசுதான் என்பது பலர் அறியாத உண்மை. 

ராஜபக்~க்களின் ஆட்சியிலே வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன என்பது மறுக்கமுடியாத உண்மையாயினும் அதனுடைய தரம் என்பது மட்டக்களப்பு துறைசார் வல்லுனர்களால் கேள்விக்குட்படுத்தப்படாமலும் இல்லை. உதாரணமாக வாகரை வீதியின் முக்கியத்துவம் அறிந்திருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ வீதி போன்று தரமான காப்பற் வீதி இடப்படாமல் தரமற்ற வீதியொன்றே இடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக அந்த வீதியை செப்பனிடுவதிலேயே நிதிவிரயம் செய்யப்படுவதுடன், இவையெல்லாம் சிங்கள பேரினவாதிகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையில், ராஜபக்~க்கள் ஒரு படிநிலை மேலானவர்கள் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 

அதேவேளை 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் கிழக்கில் மத்திய அரசினதும் உள்@ராட்சி மன்றங்களினதும் அபிவிருத்தி செயற்பாடுகள் இடம்பெற்றன என்பது நிதர்சனமான உண்மை. உதாரணமாக சுகாதார துறையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கட்டடத்திற்கான அரசின் ஏறத்தாள 638 மில்லியன் ரூபாய் நிதி, புற்றுநோய்ப்பிரிவுக்கான கட்டடத்தினை பூர்த்தி செய்வதற்கான பல மில்லியன் ரூபாய் நிதி, புற்றுநோய்க்கான கதிரியக்கப்பிரிவின் நிர்மாணத்திற்கான 128 மில்லியன் ரூபாய் நிதி, நிர்வாகப்பிரிவுக் கட்டடத்தைப் பூர்த்தி செய்வதற்கான பல மில்லியன் ரூபாய் நிதி,  ஏறத்தாள 383 மில்லியன் ரூபாய் நிதியிலான சிறுநீரக சிகிசிசைப்பிரிவு, ஏறத்தாள 373 மில்லியன் ரூபாய் நிதியிலான இருதய சிகிசிசைப்பிரிவு, 35 மில்லியன் ரூபாய் நிதியிலான சரீரப்புனர்வாழ்வு மையக்கட்டடம், ஏறத்தாள 198 மில்லியன் ரூபாய் நிதியிலான பேராசிரியர் பிரிவுக்கட்டடம், 

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாகப் பெறப்பட்டு கட்டப்பட்டு வரும் 275 மில்லியன் ரூபாய் நிதியிலான சத்திர சிகிச்சைப்பிரிவுக் கட்டடம், 50 சதவீத மேலதிக ஆளணி அனுமதி, தமிழ் சிற்றூழியர்கள் நியமனம் எனப்பல்வேறுபட்ட அபிவிருத்திகளைக் கண்டது 2015–2019 காலப்பகுதியிலே தான். 

இவை யாவற்றுக்கும் மேலாக, ராஜபக்~க்களின் ஆட்சியிலே கிடப்பில் போடப்பட்டு பகற்கனவாகத் தெரிந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பெருந்திட்டத்திலுள்ள 8 கட்டடத்தொகுதிகளுக்கும் 6,920  மில்லியன் ரூபாய் நிதிக்கு 2017.08.09 அன்று அமைச்சரவை அனுமதியை வழங்கியது மட்டுமன்றி நாணய வீழ்ச்சயினாலும் வைத்தியசாலையின் தேவை அதிகரிப்பாலும் அந்தத்தொகை பற்றாக்குறையாக இருந்த காரணத்தால் தற்போதைய அதிகரித்த தொகையான ஏறத்தாள 14,144 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது முழுக்க முழுக்க கிழக்கின் துறைசார் வல்லுனர்களால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளை சரியான முறையில் வழிநடத்தி ஆட்சியிலிருந்த அரசுக்கு தகுந்த அழுத்தங்களைப் பிரயோகித்ததனூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகளாகும்.

இதே போன்று ஒவ்வொரு துறையையும் சரியாக ஆராயாமல் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் கிழக்கில் எந்தவித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்று கூறுவதானது உண்மைக்குப் புறம்பாக கிழக்குத் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடாகத்தான் கருதமுடியும். அதுமாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட இந்த பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் ராஜபக்~க்களின் ஆட்சியிலே மீண்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கிடப்பில் போடப்பட்டு பெறுமதி குறைந்த அரசியல் கவர்ச்சிமிக்க திட்டங்கள் மாத்திரம் செயற்படுத்தப் படுவதற்குரிய ஏதுநிலையும் அதிகமாகவே காணப்படுகிறது. 

ஆனால் மறுபுறத்திலே மாகாணத்துறைகளினூடான அபிவிருத்தித் திட்டங்களிலே கிழக்குத்தமிழர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டனர் என்பதும் சட்டவிரோத காணி அபகரிப்பு, முஸ்லிம் மயமாக்கல், வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு போன்றவை இடம்பெற்றன என்பதும் மறுக்கமுடியாத நிதர்சனமான உண்மை. தமிழ் அரசியல் தலைமைகளுடைய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நியாயமான வகையில் புரிந்துணர்வை வெளிப்படுத்தாத முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கூத்தாடி அரசியலும் கிழக்கின் தமிழ் சமூகத்தை வஞ்சித்து அடிமைப்படுத்துவதனூடான அரசியல் இலாபமீட்டும் சிந்தனையுமே இதற்கு அடிப்படை காரணமாகும். 

இந்த விடயத்தில் சாதாரண முஸ்லிம் மக்களை குற்றம் சுமத்துவது தார்மீகமாகாது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இந்த நாட்டின் சிங்கள பேரினவாதத்தின் அனுசரணையுடன் மற்றொரு சிறுபான்மை சமூகத்தை ஒடுக்க நினைத்ததன் வலியையும், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதன் நிதர்சனத்தையும் முஸ்லிம் சமூகம் நிச்சயம் உணர்ந்திருக்கும். தமிழ் சிறுபான்மை சமூகத்துடன் விட்டுக்கொடுப்புடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை உருவாக்க தமிழ் அரசியல் தலைமைகளுடன் இதயசுத்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு இனிவருங்காலத்திலாவது முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும். இல்லாவிடின் இந்த நாட்டில் வாழும் இரண்டு சிறுபான்மை சமூகங்களுமே படிப்படியாக ஒடுக்கப்பட்டு தமது சொந்த அடையாளங்களை இழந்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தை மருவிய சமூகங்களாக உருவாவது தவிர்க்க முடியாததாகி காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுவிடும்.

சஜித் தலைமையில் களமிறங்கியுள்ள புதிய ஜனநாயக முன்னணி மீதான கிழக்குத்தமிழ் மக்களின் பலத்த சந்தேகத்துக்கும் அதிருப்திக்கும் மிகமுக்கிய காரணியாக இருக்கும் விடயம் முஸ்லிம் கட்சிகளுடனான கூட்டும் நெருக்கமும் ஆகும். கடந்த அனைத்து ஆட்சிகளின் போதும் அதில் பங்குதாரதாகி அதிகப்படியான வளங்களை முறையற்ற விதத்தில் சுரண்டிக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் புதிய ஜனநாயக முன்னணியில் பங்குதாரதாக இருப்பதால் அதே சுரண்டலை மீண்டும் செய்வார்கள் என்ற பயம் கிழக்குத் தமிழர்களின் தேர்தல் தெரிவில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. இங்கேதான் ராஜபக்~க்களின் சாணக்கியமும் அரசியல் சூழ்ச்சியும் உண்மையிலேயே வெற்றி கண்டுள்ளது. இதே முஸ்லிம் அரசியல்வாதிகளை வைத்து பல தடவைகள் ஆட்சி புரிந்த ராஜபக்~க்கள் ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இதே முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டுவைக்க மாட்டார்கள் என்பதற்கும்  இப்போது ராஜபக்~க்களுடன் நல்லுறவில் இருக்கும் ஹிஸ்புல்லா, அத்தாவுல்லா போன்றவர்கள் அதே வளச்சுரண்டலில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கும் எதுவித உத்தரவாதமும் கிடையாது. 

கிழக்குத் தமிழர்களின் விடிவுபற்றி சிந்திப்பவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கிழக்குத் தமிழர்களின் பின்னடைவுக்கு காரணம் கிழக்குத் தமிழர்களேயன்றி வேறு எவருமில்லை. 

ஆயுதப்போராட்டக் காலத்தில் வடக்கைவிட கிழக்கில் அதிகளவான ஆட்சேர்ப்பு செய்தமை, அதனூடாக கிழக்கின் கல்விச்சமூகத்தை அடியோடு தகர்த்தமை, விடுதலைப் போராட்டத்தின் பேரால் கிழக்கின் விவசாய மற்றும் வர்த்தக சமூகத்தை நலிவடையச் செய்து முஸ்லிம் சமூகத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திட்டமை, அதன்பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டங்களின் வீழ்ச்சிக்கும் வழிகோலியமை, அழியாச் சொத்தான கல்வியில் முயற்சியின்மையாலும் சரியான முக்கியத்துவம் கொடுக்காததாலும் போட்டிப் பரீட்சைகளிலும் பல்கலைக்கழக அனுமதிகளிலும் தொடர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றமை, இதனூடாக அரச வேலைவாய்ப்புகளின் திறமைகாண் பரீட்சைகளில் தகைமை பெறமுடியாத நிலை, முயற்சியை மூலதனமாக்கி அயராத உழைப்பின் மூலம் சொந்தக்காலில் முன்னேற முடியாத கையாலாகாத்தனம், மதுபோதைக்கும் பகட்டு வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டு இலவசங்களை எதிர்பார்க்கும் கையறுநிலை, உணர்ச்சியூட்டும் தமிழ் அரசியல் விபச்சாரிகளின் வெட்டிப்பேச்சில் மயங்கி எந்தவொரு மக்கள் நலத்திட்டத்திற்கும் எகிர்ப்புத் தெரிவிக்கும் முட்டாள்தனம், தமது அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வு விடயத்தைக் கையாளும் அதேவேளை ஆட்சியிலும் பங்கெடுப்பதனூடாக கிழக்குத் தமிழ்ச்சமூகத்திற்கு தேவையான வழங்களைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் ஆணையை வழங்காமை என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். கிழக்குத் தமிழர்களின் பின்னடைவுக்கு காரணமாக முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் நோக்கி சுட்டு விரல் நீட்டுபவர்கள் ஏனைய விரல்கள் அனைத்தும் தம்மையே சுட்டி நிற்கின்றன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடி தமது சொந்தப்பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது மட்டுமன்றி, கிழக்குத்தமிழர் அரசியலில் தாமும் இடம்பிடித்துவிட வேண்டுமென்ற நீண்டகாலக் கனவுகளுடன் பணம் சம்பாதிக்கத் திரியும் அரசியல் வியாபாரிகளிடம் கிழக்கு தமிழ் மக்கள் சோரம் போகாது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டு ஜனநாயகம் வெற்றி பெற்று அராஜகம் ஒழிய வாக்களிக்கவேண்டும்.

தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக உழன்று பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் 
பலவேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
மகாகவி பாரதி  

SHARE

Author: verified_user

0 Comments: