23 Sept 2019

தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் இன்று நிற்கின்றனர் - ஜனா.

SHARE
தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் இன்று நிற்கின்றனர் - ஜனா. 
தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் இன்று நிற்கின்றனர். வரலாற்றில் தோல்வியடைந்த இனமாக தொடர்ந்தும் எமது வரலாற்றை பதிவு செய்வதா, இல்லை வரலாற்றில் இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் எமது தமிழ்த் தேசிய செல்நெறியினை சரியான வழித்தடத்தில் கொண்டு சென்று எமது இலக்கினை அடைய நாம் செயல்பட்டோம் என்று பதிவு செய்வதா என்பதை தீர்மானிக்கும் சரியான சந்தியில் இன்று நிற்கின்றோம். அதற்கான வாய்ப்பை ஜனாதிபதி தேர்தல் எமக்கு வழங்கியுள்ளது . அதனை சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களில் உள்ளது.

என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டடமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை அவர் விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது….
இந்த வாய்ப்புமிகு தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும் .

தனிப்பட்ட அமைப்பு நலன், தனிப்பட்ட கட்சி நலன், தனிப்பட்ட நபர் சார்ந்த நலன் எவையும் இது தொடர்பான தீர்மானம் எடுக்கும்போது கருத்தில் கொள்ளப்படாது தமிழ்த் தேசிய நலன் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஆனால் நிகழ்வுகளும் நடத்தைகளும் இதற்கு முரணாகவே பளிச்சிடுகிறது.

தமிழ்த் தேசியத்திற்காக ஒருமித்து போராடிய இயக்கங்கள் தமக்கிடையே பிளவுபட்டு மோதுண்டு பின்னர் ஒருங்கிணைந்து பின்னர் பிளவுண்ட வரலாறு எமக்குரியது. அதன் பின்பும் கூட ஜனநாயக அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியத்தின் அவசியம் உணரப்பட்டு முரண்பட்ட அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு வரவைத்து தமிழ் ஒற்றுமை வலுவாக்கப்பட்டது. ஆனால் இந்த ஒற்றுமை, இந்த இணைப்பு சிலரது தனிப்பட்ட கட்சி, சிலரது தனிப்பட்ட செல்வாக்கு, சிலரது தனிப்பட்ட அபிலாசைகளுக்கு தாரை வார்க்கப்படக்கூடாது என்பது தமிழ்த் தேசியத்தை நேசித்த, நேசிக்கும் என்போன்றவர்களின் அவாவும் ஆதங்கமும் ஆகும்.

இது எவர் மீதும் வாசிக்கும் குற்றப்பத்திரிகை அல்ல. இன்றைய வாய்ப்பினை எமக்காக மாற்றிக் கொள்ளவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நமது தனிப்பட்ட கட்சி, தனிப்பட்ட கூட்டு, தனிப்பட்ட செல்வாக்கை பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில் தேவையேற்படின் காட்டுவோம். அது ஏற்படுத்தும் பாதிப்பினைவிட இன்று நாம் ஒருமித்து பயணிக்காவிடில் ஏற்படும் பாதிப்பு எமக்கும் எம் இனத்திற்கும் கடந்த ஆறு தசாப்த கால எம் அரசியல் முனைப்புக்களையும் கபளிகரம் செய்து மீண்டும் பேரினவாதிகளின் கால்களில் மண்டியிடவைக்கும் என்பது மட்டும் திண்ணம் என்று என் அரசியல் அறிவு சொல்கிறது. என்மன ஆதங்கமும் இதுவே! புரிவதும் புரிந்தும் தன்னிலையில் மாறாது தமிழ்த் தேசியத்தை அழிப்பதும், தமிழ்த் தேசியப் பரப்பில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும். இது உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம். ஏன அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: