கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் பலி சந்தேக நபர்களுக்கு ஒக்ரோபெர் 11 வரை விளக்கமறியல்.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய கித்துள் வனப்பகுதிக்குள் கட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவனொருவன் பலியான சம்பவத்தோடு தொடர்புபட்டதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் ஒக்ரோபெர் 11அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
சனிக்கிழமை 28.09.2019 இரவு 6.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கித்துள் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன் தனு (வயது 14 ) என்ற சிறுவன் பலியாகியிருந்தார்.
இச்சம்பவத்தோடு தொடர்புபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு சிறுவன் உட்பட மூவர் கரடியனாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கித்துள் கிராமத்தைச் சேர்ந்தவர்களான சௌந்தரராஜன் இந்துஜன் (வயது 13), களுமாத்தையா கலாரூபன் (வயது 21), கிருஷ்ணபிள்ளை உதயகுமார் (வயது 25) ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இம்மூவரும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி. தியாகேஸ்வரன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை 29.09.2019 பிற்பகல் நிறுத்தப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு நீதிவானால் பிறப்பிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
கட்டுத்துப்பாக்கி சகிதம் சகபாடிகளான நான்கு பேர் கித்துள் வனப்பகுதிக்குள் மிருக வேட்டைக்குச் சென்றிருந்தபோது காட்டு விலங்குக்கு குறி வைத்த துப்பாக்கிச் சூடு குழுவினரில் ஒருவராக நின்றிருந்த சிறுவன் மீது பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறுவனை கரடியானாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த நிலையில் சிறுவன் அங்கு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு கட்டுத்துப்பாக்கி கொண்டு காட்டு விலங்கு வேட்டையில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment