2 Jul 2019

1750 ஏக்கர் காணி வர்த்தமானி பிரகடனத்தை இரத்து செய்க! : ஜனாதிபதிக்கு கடிதம் - இரா.துரைரெட்ணம்

SHARE
1750 ஏக்கர் காணி வர்த்தமானி பிரகடனத்தை இரத்து செய்க! : ஜனாதிபதிக்கு கடிதம் - இரா.துரைரெட்ணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விவசாயம் செய்கின்ற ஒப்பக்காணிகளை பயன்படுத்தும் வேளையில் அண்ணளவாக 1750 ஏக்கர் காணியை மத்திய அரசாங்கத்தின் வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சினால் 2022ஃ3ம் இலக்கம் கொண்ட 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 05 ஆம் திகதி (திங்கட்கிழமை) அன்று வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை இரத்துச் செய்யுமாறு கூறி, ஜனாதிபதி, பிரதமர், வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் செவ்வாய்க்கிழமை (02) குறிப்பிட்டார்,

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… பன்சேனை-148டீ கிராமசேவையாளர் பிரிவிலுள்ள பன்சேனைக் கிராமத்தில் இரும்பன்ட குளத்துக்கு அருகிலும், பொக்கட்டர்குளப்பகுதி, மகிழையடி ஓடைப் பகுதியையும் உள்ளடக்கிய 548அரை ஏக்கர் காணியும், இதே பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமம் உட்பட அடைச்சகல்குளம், கண்டியனாறு இரு குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள 726 கால்ஏக்கர் காணியும், இத்தோடு  ஆயிலியடிச் சேனை, அழகிப்போடியார் குளத்தையும் உள்ளடக்கிய பகுதியோடு, காந்திநகர் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள வெள்ளைக்கல் தளவாய் பகுதியையும் சேர்த்து 507 கால் ஏக்கர் காணிகளுமாக 1750 ஏக்கர் விவசாயக் காணியை வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காணிகளைப் பொறுத்தவரையில் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் இப்பகுதியில் பல நூற்றக்கணக்கான குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்து மேட்டுநிலப் பயிர்செய்கை, வேளாண்மைச் செய்கை, ஏனைய இயற்கையோடு ஒத்த தொழில்களைச் செய்தது மட்டுமல்லாமல் கால்நடை, மீன்பிடி தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மக்களைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக பல தடவைகள் இடம் பெயர்ந்து வருடாவருடம் நீர் உள்ள காலத்தில் தொழில் செய்து வருவது வழக்கமாகும். நிரந்தரமாக கால்நடை, மீன்பிடி, விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் உறுதி, ஒப்பம், ஒப்பத்திற்கு விண்ணப்பித்த ஆதாரங்கள், இன்னும் ஒருசிலர் சேனைப்பயிர் செய்து கொண்டும் வருகின்றனர் இத்தோடு இப்பகுதியில் நிரந்தரமாக வீட்டுத்திட்டங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக 300 இற்குமேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு காலமாக நிரந்தரத் தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் பிரதேசமாக உள்ளதால் மக்கள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், காணிதொடர்பான குழுக்கள் ஒருவருக்கும் தெரியாமல் இக்காணிகளை வர்த்தமானி பிரகடனப்படுத்தியது கவலைக்குரிய விடயமாகும். உள்நோக்கம் கொண்டதாக அமைகின்றன.

இவைமட்டுமின்றி பன்சேனைப்பகுதியில் இரும்பன்ட குளத்திற்கு அருகிலுள்ள
548 அரைஏக்கர் காணியில் 50 ஏக்கர் காணியை சூரிய மின்சக்தி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 30 வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கி உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. இக்காணிகளை நீண்டகாலமாக 300 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து பராமரித்து ஓப்பங்கள் வழங்கி, ஒப்பத்திற்கு விண்ணப்பித்து ஆளுகைப்படுத்தி வருகின்ற போது இக்காணிகளை வர்த்தமானி பிரகடனப்படுத்தி சூரிய மின்சக்தி திட்டத்திற்கு இக்காணிகளை வழங்குவது
பொருத்தமானதாக இருக்காது என்பதனால் வர்த்தமானி பிரகடனப்படுத்தப் பட்டதையும், காணி வழங்கியதையும் நிறுத்தி அக்காணியைப் பயன்படுத்துகின்ற  மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறு ஒழுங்குகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் விரிவான கடிதங்களை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேசசபை தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கதாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: