பட்டப் பகலில் ஆணொருவர் பெற்றோல் ஊற்றி எரிப்பு சந்தேக நபர் கைது திகிலூட்டும் சம்பவத்தால் பிரதேசத்தில் பரபரப்பு
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் 9 ஆம் குறிச்சிப் பகுதியில் ஆண் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீயிடப்பட்டதில் அவர் ஸ்தலத்திலேயே கருகி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை 01.04.2019 மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த திகிலூட்டும் சம்பவத்தில் வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே பலியாகியுள்ளார்.
கொல்லப்பட்டவர் புகையிரதக் கடவை ஊழியராகப் பணிபுரிந்து வந்தவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
விநாயகபுரம் 9 ஆம் குறிச்சி வீதியில் மதுபோதையில் காணப்பட்ட கொல்லப்பட்டவருக்கும் மற்றையவருக்குமிடையில் முன்னதாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மற்றைய நபரான பாலசுப்பிரமணியம் ரஞ்சன் (வயது 37) என்பவர் நாகன் சாமியன் என்பவரை மது போத்தலால் தாக்கி அவர் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பெற்றோல் ஊற்றி தீயிட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் இப்பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஏற்கெனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.03.2019) சரீரப்பிணையில் வெளியில் வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment