ஐக்கிய தேசிக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்திக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (06) மாலை கோவில்போரதீவுக் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கோவில்போரதீவுக் கிராம மக்களால் அக்கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள், என பலதரப்பட்டோரும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்போரதீவுக் கிராமத்தில் பன்நெடுங்காலமாக அமைந்திருக்கின்ற தித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தனது அரசியல் பலத்தைப் பாவித்து தான் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் அக்கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பசுத்தோல் போர்த்த புலிகளே!, கோவில்போரதீவு மக்களால் கட்டப்பட்ட ஆலயத்தை விட்டு வெளியேறு, எங்கள் கோவில் போரதீவு மக்களின் வாக்கைப் பெற்று வயிறு வளர்த்த கணேசமூர்த்தியே அரசியல் வேண்டாம் ஆலயத்தை விட்டு வெளியேறு, அரசியல்வாதி கணேசமூர்த்தியே பாரம்பரியம்பேசி மக்களை ஏமாற்றாதே, கோவில்போரதீவு மக்களால் அமைக்கப்பட்ட ஆலயத்திற்கு கணேசமூர்த்தி எந்த வகையில் சொந்தம் கொண்டாடுவது, அரசியல்வாதிக்கு ஆலயத்தில் என்ன வேலை, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கணேசமூர்த்திக்கு எதிரான கண்டன அறிக்கையும் இதன்போது வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment