17 Sept 2018

பிரதேச சபை அலுவலரான பெண்ணின் தாலிக்கொடி பறிப்பு

SHARE
நாவிதன்வெளி பிரதேச சபை அலுவலரான குடும்பப் பெண்ணின் தாலிக்கொடியை வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் பற்றி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடைப்  பெலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை 13.09.2018 பிற்பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் சுமார் 10 பவுண் தங்கத் தாலிக்கொடியே பறித்துச் செல்லப்பட்டுள்ளது என்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நாவிதன்வெளி பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றும் குடும்பப் பெண் அவர் கடமையாற்றும் அலுவலகத்திலிருந்து நாவிதன்வெளியிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று தனது கைக்குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு கடமைக்காகச் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரை வழிமறித்துள்ளனர்.

அவ்வேளையில், சற்றும் எதிர்பாராத விதத்தில் கணப்பொழுதில் கொள்ளையர்கள் மிக லாவகமாக பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துப் பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

சவளக்கடை வீட்டுத்திட்டப் பகுதியில் வைத்து சம்பவதினம் பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக சவளக்கடைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: