சனிக்கிழமை காலமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் இனங்களுக்கிடையிலான குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வுக் கருத்துக்களை முன்வைத்து அதன்படி வாழ்ந்தும் காட்டியவர் என அவரது மரணம் தொடர்பான இரங்கற் செய்தியில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கற் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறந்த கல்விமானும் புத்திஜீவியுமான ஹஸ்புல்லாஹ் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை கல்விப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்தவர்.
அன்னாரின் திடீர் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமல்ல இந்த நாட்டின் சகவாழ்வுச் சிந்தனையாளர்களுக்கும் கல்வித்துறை சார்ந்தோருக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்பினராக இருந்த அவர் மாகாண எல்லை நிர்ணயத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இனமுறுகல்கள் வந்துவிடக் கூடாது என்பதில் குறிப்பாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
இனச்சுத்திகரிப்பினாலும், கலவரத்தினாலும் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது பூர்வீக இடங்களுக்குச் சென்று தமிழ் மக்களுடன் இணைந்து இன ஐக்கியத்தோடு வாழ விரும்புகின்றார்கள் என்பதை அவர் அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஓங்கிக் குரல் கொடுத்தார்.
தமிழ் பேசும் மக்களின் பிரிக்க முடியாத அறுந்து போகாத உறவின் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்தார்.
1997ஆம் ஆண்டு காலப் பகுதியில் அவரால் வெளியிடப்பட்ட “இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியியேற்றப்பட்ட முஸ்லிம்களும்” எனும் தொடர் ஆய்வு நூல்கள் மூலம் சர்வதேச சமூகத்துக்கும் மனித நேயச் செயற்பாட்டாளர்களுக்கும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அனைவரiயும் சிந்திக்கத் தூண்டினார்.
அவரது ஒவ்வொரு நூல்களிலும் தமிழ் - முஸ்லிம் சமூக இன ஐக்கியத்தின் மறுமலர்ச்சி பற்றி வலியுறுத்தப்பட்டு வந்ததோடு தமிழ் முஸ்லிம் மக்களின் கூட்டு வாழ்க்கையே சமாதானம் மற்றும் உரிமையின் திறவுகோல் என்பதையும் அவர் சிந்தனைக்காக முன்னிறுத்தியே வந்தார்.
அவர் சமூக சகவாழ்வுக்காக, இன ஐக்கியத்திற்காக விட்டுச் சென்ற பணிகளை இருப்பவர்கள் தொடர்வதே அன்னாருக்கு ஆற்றும் நன்றிக் கடனாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment