மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதில் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
ஏறாவூரில் புதிதாக உருவெடுத்துள்ள சுகாதார சேவைகளுக்கு இடையூறான மறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை 01.07.2018 மேலும் தெரிவித்த அவர், 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் மாத்திரமே இவ்வாறு தடுப்பூசி ஏற்றுவதற்கும், சுகாதார சேவைகளை அணுகுவதற்கும் மறுப்புத் தெரிவித்து வந்திருந்தார்.
ஆனால், நாளடைவில் இந்தவித மூட நம்பிக்கைகள் வியாபித்து இப்பொழுது 40 குடும்பங்களைச் சேர்;ந்த பெரும் தொகையான நபர்கள் முக்கியமான தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கும், பாதுகாப்பான மகப்பேற்றைச் செய்து கொள்வதற்கும், இன்னபிற சுகாதார சேவைகளை அணுகுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதோடு சுகாதார வசதிகளை அணுகும் ஏனையவர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
முறைப்படியான சுகாதார சேவைகளை அணுகாமல் 2016ஆம் ஆண்டு ஒரு மகப்பேறும்இதுவரை 7 மகப்பேறுகளும் சம்பவித்திருக்கின்றன.
இவர்கள் தமது காலடியில் அதிவசதி கொண்ட வைத்தியசாலைகள் இருக்கும் பொழுது சுமார் 4 மணித்தியால தூரப் பயணமுள்ள பொத்துவில் எனும் தொலைதூரக் கிராமத்திற்குச் சென்று பாரம்பரிய மகப்பேற்று உதவியைப் பெற்றுள்ளதோடு தாய் சேய் பாதுகாப்பு தடுப்பூசி எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டிருக்கின்றது.
தாய் சேய் இறப்பு மற்றும் அவர்களது சுகாதார நலன்களைக் கருத்திற்கொண்டு வீட்டுப் பிரசவங்கள் இட்மபெறக் கூடாது என்பதே சுகாதாரத் துறையின் கொள்கையாகும்.
இதனைச் சமூக மட்டத்தலைவர்கள் கருத்திற் கொண்டு உடனடியாகக் கருமமாற்ற வேண்டும்.
இல்லையேல் பிரதேசத்தின் சுகாதார நலன்கள், ஆரோக்கியம் உள்ளிட்ட விடயங்கள் எதிர்வரும் காலங்களில் பெரும் சவாலைச் சந்திக்கும்.
நாட்டில் தாய் சேய் மரணங்கள், தொற்று நோய்கள் இடம்பெறாதவாறும் இன்னபிற சுகாதார நலன்களை மேம்படுத்தி சுகவாழ்வையும் ஆரோக்கிய சமூகத்தையும் உருவாக்குவதற்காகவும் அரசாங்கம் பல கோடிக்கான ரூபாய்களைச் செலவிடுகிறது.
அவ்வாறான முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றபோது இத்தகைய மூடத்தனமான கொள்கைகள் சமூகங்களில் ஊடுருவது நாட்டு நலனுக்குக் கேடானது என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய மூட நம்பிக்கைகள் அக்குறணை, மாத்தளை, நாவலப்பிட்டி, புத்தளம், தோப்பூர் போன்ற இடங்களில் முளைவிட்டிருந்து இப்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment