19 Jun 2018

ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பான சுற்றுநிருபத்தைத் திருத்தியமைப்பதற்கு ஆலோசனை சமர்ப்பிப்பு

SHARE
ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பான 2007ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க சுற்றுநிருபத்தைத் திருத்தியமைப்பதற்கு கல்வி அமைச்சிடம் ஆலோசனைகளைச்  சமர்ப்பித்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா ஞாயிற்றுக்கிழமை 17.06.2018 தெரிவித்தார்.
ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பான மேற்படி சுற்றுநிருபத்தைத் திருத்தியமைப்பதற்கு கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் முக்கியமான 7 ஆலோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது.

கல்விச் சேவைகள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கல்வித் துறைக் கண்காணிப்பு உப குழு, ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பான 2007ஃ20ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் குறைபாடுகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளரிடம் பணிப்புரை விடுத்திருந்தது.

அந்தப் பணிப்புரைக்கமைவாக ஆலோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் கல்வி மற்றும் குணநல அபிவிருத்திக்கான மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம். ரத்னாயக்க ஆசிரியர் தொழிற் சங்கங்களைக் கேட்டிருந்தார்.

இதன்படி தேசியப் பாடசாலைகளில் ஓர் குறிப்பிட்ட காலம் சேவையாற்றியதன் பின்னர் கட்டாயமாக மாகாணப் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குதல், இதற்கேற்ப மாகாணப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் தேசியப் பாடசாலைகளில் இணைவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல், பிரபலமான தேசியப் பாடசாலைகளில் சேவைக் காலத்திற்கு ஏற்றவாறு இடமாற்றம் செய்வது தொடர்பில் தீர்மானித்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலேயே ஆலோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

இதன்படி கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கமும் ஆலோசனைகளைச்  சமர்;ப்பித்துள்ளது.

ஆசிரியரொருவர் தேசியப் பாடசாலையொன்றில் அதிகபட்சமாக 8 வருடங்கள் கடமையாற்றியதன் பின்னர் கட்டாயமாக மாகாணப் பாடசாலைக்கு இடமாற்றப்படல் வேண்டும்,

அதேவேளை மாகாணப் பாடசாலை பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியரொருவர் தேசியப் பாடசாலையில் இணைந்து கொள்ள விரும்புவாராயின் அவர் மாகாண நிருவாகத்திலுள்ள கஷ்ட அல்லது அதி கஷ்டப் பாடசாலையொன்றில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் கடமையாற்றியிருப்பது கட்டாயமாக்கப்படல் வேண்டும்,

ஆசிரியரொருவர் எந்த வகை இடமாற்றத்தில் இருந்தும் விலக்குப் பெறுவதற்கான வயதெல்லை 55 ஆக நிர்ணயிக்கப்படல் வேண்டும்,

இடமாற்றத்தில் இருந்து விலக்குப் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் அரசாங்க வைத்தியசாலையொன்றினால் வழங்கப்படல் வேண்டும் என்பன உள்ளிட்ட மொத்தம் 7 ஆலோசனைகள் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தினால் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


SHARE

Author: verified_user

0 Comments: