ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் கோட்டைக்கலாறு வாவிப் பகுதியில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் சுழலில் சிக்கி மாயமான மீனவர் திங்கட்கிழமை(18) காலை சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டைக்கல்லாறு, எழுத்துக்காரன்துறை கண்ணகையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ஆர். இராஜகுமார் (வயது 39) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.
இவர் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை களுவாஞ்சிக்குடி ஓடக்கரை வாவிப் பகுதியில் கரையருகே நின்று வலைவீசிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று, மழை, இடி மின்னல் காலநிலையில் காணாமல் போயிருந்தார்.
காணாமல்போனவரைத் தேடும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து மீனவர்கள், ஊர்மக்கள், கடற்படையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் பயனாக திங்கட்கிழமை காலை இவர் காணாமல்போன ஓடக்கரை சுழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டது.
காணாமல் போனவரை வாவி முதலைகள் கௌவிச் சென்றிருக்கலாம் என முன்னதாக ஊகிக்கப்பட்டபோதும் அவர் அந்த இடத்திலுள்ள நீர்ச்சுழியிலேயே அகப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று ஊர்வாசிகளும் மீனவர்களும் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூறாய்வுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment