31 May 2018

எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் முன்பள்ளிக் கல்வியில் கரிசனை இல்லாதிருப்பது நாட்டின் எதிர்காலத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் பிரதேச செயலாளர் சத்தியானந்தி

SHARE
எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் முன்பள்ளிக் கல்வியில் கரிசனை இல்லாதிருப்பது வளமான தேசத்தை உருவாக்குவதிலும் சிறந்த பிரஜைகளை உருவாக்குவதிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தெரிவித்தார்.
பிரதேசத்தில் காணப்படும் முன்பள்ளிகளின் நிலைபற்றிய கரிசனையை அவர் வியாழக்கிழமை 31.05.2018 வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
பாடசாலைக் கல்விக்கு முன்னாலுள்ள முன்பள்ளிப் பருவக் கல்வியே ஒரு மனிதனை உருவாக்கும் முதலாவது சூழல் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆரம்பக் கல்வி வளர்ச்சியில் முன்பள்ளிக் கல்வி என்பது மிகவும் அடிப்படையானதும் அக்கறை கொள்ளக் கூடியதுமான பகுதி.

இதனை அரச, அரச சார்பற்ற மற்றும் சமூக சேவை மக்கள் அமைப்புக்கள் கரிசனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமகாலத்தில் உள்ள முன் பள்ளிகள் சிறந்த எதிர்காலத் தலைவர்களை உருவாக்கக் கூடிய மனோரம்யமான விளையாட்டுடன் கூடிய வசதிகள் நிறைந்த சூழலுடன் அமைந்திருக்கிறதா என்றால் அப்படி இல்லை என்றே பதில் கூறவேண்டியுள்ளது.

ஏனெனில், முன்பள்ளி அபிவிருத்திகளை எவரும் முன்னுரிமை கொடுத்து கரிசனைக்கு எடுத்துத் கொண்டதாகத் தெரியவில்லை.

வேறு கட்டுமானங்கள், உட்கட்டுமானங்கள், தொழிற் பேட்டைகள், முதலீட்டுடனான பாரிய திட்டங்கள் என்று ஏராளமான பணச் செலவில் அபிவிருத்திகளைத் திட்டமிடுகின்றபோது முன்பள்ளிகளை முன்னேற்றும் திட்டங்களைப் பற்றிய எந்தவொரு ஆய்வும், முன்மொழிகளும், சாத்தியவள அறிக்கைகளும் சமர்;ப்பிக்கப்படுவதில்லை.

இவ்வாறான கரிசனையற்ற போக்கு அறிவும் ஆரோக்கியமும் உள்ள சிறந்ததொரு எதிர்கால இளஞ் சமுதாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை நாம் தவற விட்டுச் செல்வதாகவே கருத வேண்டியுள்ளது.

சமூகத்தின் ஒட்டு மொத்தமான விடயங்களையும் நோட்டமிடுகின்ற பொறுப்பு வாய்ந்த பிரதேச செயலாளர் என்கின்றபொழுது கூடுதலான முன்பள்ளிகள் சிறந்த வசதிகளுடனான சூழலைக் கொண்டிருக்கவில்லை என்பதையே நான் வெளிப்படையாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

முன்பள்ளிகள் மீது அக்கறை கொள்ளாத நிலைமை இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல பொதுவாக நாட்டின் நாலா பாகங்களிலும் இதே பின்னடைவுதான் காணப்படுகின்றது.

முன்பள்ளிகள் சிலவற்றை உள்ளுராட்சி மன்றங்கள் நடாத்துகின்றன, இன்னும் சிலவற்றை அந்தந்தப் பிரதேசத்திலுள்ள மக்களே நடாத்துகின்றார்கள். அங்குள்ள ஒரு சில யுவதிகளும் பெண்களும் முன்வந்து தங்களைத் தியாகம் செய்து தொண்டு அடிப்படையிலும் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, இதனையிட்டு ஒட்டு மொத்த சமூகமும் அக்கறை கொள்ள வேண்டும்.
அதேவேளை அரச சார்பற்ற உள்ளுர் மற்றும் சர்வதே  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உள்ளுர் பொது அமைப்புக்களும் இந்த விடயத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள். பெற்றார் சங்கங்கள், கொடையாளர்களும் அக்கறை எடுக்க வேண்டும்.
எனவே, இவற்றை முன்னேற்றுவதற்கான திட்டங்களை உள்ளுராட்சி நிருவாகமும் மற்றும் பொது அமைப்புக்களும் பொது மக்களும் மன் வைத்துச் செயற்பட வேண்டும்.” என்றார்.

மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 34 முன்பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 986 சிறார்கள் கற்கின்றார்கள். இந்த முன்பள்ளிகளில் 28 முன்பள்ளிகளை பெற்றோர் மற்றும் பொது அமைப்புக்களும் 05 முன்பள்ளிகளை தேவாலயமும், 1 முன்பள்ளியை பள்ளிவாசலொன்றும் நடாத்தி வருகின்றது. இந்த ஒட்டு டொத்த முன்பள்ளிகளிலும் 79 முன்பள்ளி ஆசிரியர்கள் தொண்டாற்றுகின்றார்கள்.

SHARE

Author: verified_user

0 Comments: