31 May 2018

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14 வது நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

SHARE
2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்ட போதிலும் கொலையாளிகள் இனங்காட்டப்பட்ட போதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14 வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடவியலாளர்களின் படுகொலை தொடர்பில் உண்மையான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த நினைவு தின நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நினைவேந்தல் நிகழ்வினையடுத்து யாழில் பிரதேச ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தினை இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது. அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

SHARE

Author: verified_user

0 Comments: