மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பரிரதேச சபையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் செவ்வாய்க் கிழமை (03) போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆளையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது தவிசாளர் மற்றும் பிரத்தித்தவிசாளர் பதவிகளுக்கு திறந்த முறையில் வாக்கெடுப்பு இடம்பெற்று தெரிவுகள் நடைபெற்றன. அந்த வகையில் தவிசாளருக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யோகநாதன் ரஜனியும், சுயேட்சைக்குழு இரண்டைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ஆயுஸ்மனின் பெயரும் பிரேரிக்கப்பட்டன. பின்னர் திறந்த முறையில் வாக்கெடுப்பு இடம்பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யோகநாதன் ரஜனிக்கு 9 வாக்குகளும் சுயேட்சைக்குழு இரண்டைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ஆயுஸ்மனுக்கு 8 வாக்குக்குகளும் கிடைக்கப்பெற்ற இந்நிலையில் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தார். பின்னர் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக யோகநாதன் ரஜனி தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிரதித் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாராயணபிள்ளை தருமலிங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயக்கொடி இந்துஜாவின் பெயரும் பிரேரிக்கப்பட்டன. பின்னர் திறந்த முறையில் வாக்கெடுப்பு இடம்பெற்று நாராயணபிள்ளை தருமலிங்கத்திற்கு 9 வாக்குகளும், ஜெயக்கொடி இந்துஜாவிற்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதுடன் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை பின்னர் போரதீவுப்பற்று பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக நாராயணபிள்ளை தருமலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இறுதியில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆளையாளர் எம்.வை.எம்.சலீமினால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு சபை நிகழ்வு நிறைவு பெற்றது.
0 Comments:
Post a Comment