முஸ்லிம்களுக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்று முத்திரை குத்தப்பட்டதன் பின்னணியில் இலங்கை முஸ்லிம்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார்.
சமகால அச்சந்தரும் நாட்டு நடப்புக்கள் தொடர்பாக அவர் வியாழக்கிழமை 08.03.2018 வெளியிட்டுள்ள விஷேட கவன ஈர்ப்பு அறிக்கையிலேயே இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 08இல் கண்டி மாவட்ட முஸ்லிம்களும் இலங்கையில் பெரும்பான்மை இனப் பகுதிகளில் சிதறி வாழும் முஸ்லிம்களும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சந்தரும் சூழ்நிலையில் காலங்கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் மிகுந்த அச்சத்தில் உறைந்துபோய் உள்ளார்கள்.
நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த வரலாறு கொண்ட முஸ்லிம் சமூகம் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்ட சூழ்நிலையிலும் கண்ணீரும் கம்பலையுமாக அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனிடையே, கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியைத் தாண்டிய வேளையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human
Rights Watch) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் நிலைமை பற்றி சிலாகித்துப் பேசப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்கள் வாழ்வதற்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்று அதில் குறிப்பிடப்பட்டு இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற பல சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஆயினும், இது முஸ்லிம்கள் பால் சர்வதேச நிறுவனங்கள் கொண்ட பரிவு காரணமாக இந்த அறிக்கையில் இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன என்று ஒரு புறம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டாலும் மறுபுறம் இந்த அறிக்கையின் பின்னணியில் இனவாதிகளின் கை ஓங்கியிருப்பதாகவும் முஸ்லிம்களை இலங்கையிலிருந்து விரட்டியடிக்க சர்வதேச அங்கீகாரம் கிடைத்து விட்டது போன்று பேரினவாதிகளின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகவும் அச்சந் தெரிவிக்கப்டுகின்றது.
முஸ்லிம்களுக்கெதிராக பின்னப்படும் சர்வதேச சதி வலைகளில் இந்த அறிக்கையும் ஒன்றாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் உறைந்து போயுள்ளார்கள்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதைய காலகட்டத்திலும் இடைநடுவே நசுக்குப்பட்ட சமூகமாகவும் கண்டுகொள்ளப்படாத சமூகமாகவும் முஸ்லிம்கள் துயரங்களைச் சுமந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
அதேவேளை, இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதிலும், பொருளாதார அபிவிருத்தியிலும் முஸ்லிம்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.
முரண்பாட்டுக்குள்ளான சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் இணைப்புப் பாலமாகவும் இருந்து வந்துள்ளார்கள்.
அதேவேளை இரண்டு சமூகங்களாலும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட சமூகமாக இலங்கை முஸ்லிம்கள் இன்றளவும் இருந்து வருகின்றார்கள்.
எனவே, முஸ்லிம்களின் பூர்வீகம், வாழ்வுரிமை, பொருளாதாரம், மனித உரிமைகள் என்பனவற்றையும் மறுத்து அழித்தொழித்து முஸ்லிம்களைக் கருவறுக்கவே சதி பின்னப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அவர்களது மன நிலையில் “இது முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பில்லாத தேசம்” என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து இன்னுமின்னும் இலங்கை முஸ்லிம்களைப் பலவீனமடையச் செய்யவே இது போன்ற சதிவலைகள் பின்னப்படுகின்றன.
எனவே, இலங்கை முஸ்லிம்கள் இது தமது பூர்வீக வாழ்விடம் என்பதில் உறுதி குலையாது ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஓர்மத்துடன் செயற்பட வேண்டும்.”
0 Comments:
Post a Comment