இனவாத மதவாத அடிப்படையில் தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கேட்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு வழங்குவதற்கும் முன்வந்தால் நாடு அழிவைத் தவிர்க்கலாம் என சிரேஷ்ட ஆய்வாளரும் சமூகவியல் பயிற்சியாளருமான ஹென்ரி டி மெல் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களின் கடந்த கால வேலைத்திட்டங்களின் மதிப்பீடு தொடர்பான ஆராய்வில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதி;யில் ஞாயிற்றுக்கிழமை 25.03.2018 இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் ஆற்றியுள்ள இன நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் அதன் காரணமாக ஏற்பட்ட சாதக விளைவுகள் குறித்தும் இன்னமும் தீர்க்கப்படாத விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
மதிப்பீட்டு ஆராய்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பல்வேறுபட்ட சமூக அமைப்புக்களிலும் எல்லா மதங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்திருப்பது இனங்களுக்கிடையிலான இடைவெளிகளைக் குறைத்து சகவாழ்வைக் கட்டியெழுப்ப உதவும்.
நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு இன நல்லிணக்கத்திற்காகவும் சகவாழ்வுக்காகவும் பிரதேசத்திற்குப் பொருத்தமான செயற்பாடுகளை அடையாளம் கண்டு செயலாற்ற வேண்டும்.
கிடைக்கக் கூடிய உள்ளுர் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
பல்வேறுபட்ட சமூகங்கள் இணைந்து வாழ்க்pன்ற பிரதேசங்களில் அனைத்து அமைப்புக்களிலும் அனைவரும் பங்கெடுப்பதே சிறந்தது.
மட்டக்களப்பிலும் அவ்வாறுதான் தனித்து நிற்காமல் எல்லோரும் எல்லாவற்றிலும் இணைந்து பங்களிப்புச் செய்ய வேண்டும்.
ருவாண்டா போன்ற அரசியல் சமூக பொருளாதார கல்வி மற்றும் வளங்களில் மிகவும் பின்தங்கிய அதேவேளை இனக்குழுக்களின் வன்முறைகளில் சிக்கி அனைத்தையுமே இழந்து நிற்கும் அந்தப் பாமர மக்கள் தங்களுக்குள் பரஸ்பரம் மன்னிப்பை வழங்கி புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டு இணைந்து வாழும் பொழுது ஏன் கல்வியில் 96 சத வீத அடைவு மட்டத்தையும் மற்றும் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ள நாம் முரண்பாட்டுக்குள்ளான சூழ்நிலைகளில் மன்னித்து மறந்து கைகோர்க்க முடியாது.
யுத்த காலத் தவறுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தென்னிலங்கைச் சமூம் அச்சம் கொண்டுள்ளது.
இடம்பெற்ற தவறுகள் குறைபாடுகள் எதிர்காலத்தில் அவை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவை பற்றி ஆராயத்தான் வேண்டும்.
இந்த நாட்டில் எல்லாச் சமூகங்களையும் சேர்ந்த எத்தனையோ நல்லவர்கள் எவ்வளவோ நல்ல காரியங்களை பொதுவில் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவை வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்லை.
ஆனால், வன்முறைகள்தான் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.
நாட்டிலே இடம்பெறும் நல்ல விசயங்களுக்கும் தீய விசயங்களுக்கும் உடகங்களின் பங்கு உண்டு.
இது ஊடக நிறுவனங்களின் நல்லொழுக்கங்கள், அந்த ஊடகங்களுக்காகப் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் நல்லொழுக்கங்கள், மனப்பான்மை, கண்ணோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த ஒழுக்கங்களை அடிப்படையாக வைத்தே சமீபத்தில் கண்டியிலும் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்ற சம்பங்களை ஊடகங்கள் பிரதிபலித்த விதத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அதேவேளை தீயொழுக்கமுள்ளவர்கள் தங்களது பாத்திரப் பங்கையும் நிறைவேற்றுவார்கள். இவ்வாறுதான் நிகழ்வுகள் இடம்பெற்று முடிகின்றன.
நாடு பூராகவும் 16 மாவட்டங்களில் இத்தகைய மாவட்ட சர்வ மதப் பேரவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிலையான நீடித்த சமூக அமைதிக்காக நாம் எல்லோரும் இணைந்து ஒரே நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துக் கொண்டு பணியாற்றினால் இந்த நாடு உருப்படும்” என்றார்.
தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த சயமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகவாழ்வும் இன ஐக்கியத்திற்குமான சர்வமத ஆர்வலர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment