1 Mar 2018

ரணவிரு சேவையின் கீழ் வீடுகளைப் பெறுவதற்கு சொந்தக் காணியைக் கொண்டிருப்பது அவசியமாகும் ரணவிரு சேவா மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன

SHARE
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு வீடுகள் நிருமாணித்துக் கொடுக்கும் “ரணவிரு சேவா” திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற விரும்புவோர் சொந்தக் காணிகளைக் கொண்டிருப்பது அவசியமாகும் என ரணவிரு சேவா மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை 28.02.2018 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ரணவிரு சேவா குடும்ப அங்கத்தவர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசணையுடன் சுமார் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 38 வீடுகள் தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஒரு வீடு சிங்களக் குடும்பத்திற்கும் நிருமாணிக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாத தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் இடம்பெறும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளற்றிருக்கும் ஏனைய ரணவிரு சேவா குடும்பங்களுக்கு 56 வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளைப் பெறுவதாயின் முக்கியமாக காணி உரித்தை ரணவிரு சேவா பயனாளி கொண்டிருப்பது அவசியமாகும். காணி இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவது சாத்தியமற்றது. இதனை ரணவிரு சேவா பயனாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான சேமநலன்களை “ரணவிரு சேவா” கவனித்து வருகின்றது.
வீட்டு வசதிகளைத் தவிர ரணவிரு குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் அக்குடும்பங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பையும் கருத்திற் கொண்டு பல்வேறு சுயதொழில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப், அதன் செயலாளர் எஸ். கனகசபை, பொருளாளர் ஏ. லிங்கராஜா உட்பட ரணவிரு பயனாளிக் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: