27 Feb 2018

அம்பாறையில் கலவரம்; வாகனங்கள்,பள்ளிவாசல் மீது தாக்குதல்

SHARE
அம்பாறை நகரில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமையும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவித சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், அம்பாறை பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளினால் அங்கிருந்த ஒரேயொரு பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் ஹோட்டலில் உணவருந்த வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இளைஞர்கள் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் ஹோட்டல் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கடந்த நிலையில் அங்கு திரண்டு வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோர் குறித்த ஹோட்டலையும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான பலசரக்கு கடையையும் தாக்கியுள்ளனர்.
பள்ளிவாசலினுள் அத்துமீறி உள்நுழைந்தோர் அங்கிருந்த அல்குர்ஆன் பிரதிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: