மட்டக்களப்பு கல்குடா கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற எதனோல் உற்பத்திச்சாலை தொடர்பாக கடந்த வருடம் 2017 மார் 22ம் திகதி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் புண்ணியமூர்த்தி சசிதரன் ஆகியோர் மேற்படி உற்பத்திச்சாலையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வியாழக்கிழமை 22.03.2018 வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த வழக்கு மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த எதனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும் தாக்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு வியாழக்கிழமையுடன் 22.03.2018 ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளான கல்குடா கும்புறுமூலை வேம்பு பகுதியில் 24 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுவருகின்ற எதனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக கடந்த வருடம் மார்ச் 21ம் திகதி செய்தி அறிக்கையிடச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் அதன் பின்னர் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விசாரணையில் திருப்தி இல்லாத தன்மை காரணமாகவும் குறித்த விசாரணை தொடர்பான நம்பகத்தன்மையில்லை என்பதை பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியதற்கு அமைவாக கடந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதியன்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் இரு ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அன்றைய தினம் காலை 9.30 மணியில் இருந்து ஆரம்பமான பொலிஸ் விசாரணையில் சுமார் 3 மணித்தியாலம் வரை இரு ஊடகவியலாளர்களிடம் இருந்தும் வாக்குமூலம் பதியப்பட்டது.
கல்குடா எதனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக அறிக்கையிட அப்பகுதியிலுள்ள வீதியினால் சென்றபொழுது இரு ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டதுடன் சுமார் 6 கிலோ மீற்றர் வரை தங்களைத் துரத்திச் சென்று நேரடியான அச்சுறுத்தலை விடுத்திருந்த நிலையில் கல்குடா பொலிஸில் விசாரணை வாக்குமூலம் பதியப்பட்டதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் காரியாலயத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி விசாரணைக்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் இருவரிடமும் அங்கும் வாக்குமூலம் பதியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வாக்கு மூலம் பதியப்பட்டது.
0 Comments:
Post a Comment