தமிழ்தேசியக்கூட்டமைப்பினது அரசியல் பயணத்திற்கும்,தமிழ்மக்களின் இனவிடுதலைக்கும், தமிழ்மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்ளுவதற்கும், தமிழ்தேசிய கூட்டமைப்போடு துறைநீலாவணை பொதுமக்கள் என்றும் இணைந்திருப்பார்கள் என்பதை உள்ளுராட்சி தேர்தலில் நிரூபித்துள்ளார்கள் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 1350 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய துறைநீலாவணையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சரவணமுத்து தெரிவித்தார்.
உள்ளுராட்சி தேர்தலில் வெற்றியடைந்துள்ள க.சரவணமுத்து ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை (13) கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த கால விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்தேசியக்கூட்டமைப்பினது அரசியல் பயணத்திற்கும் தோள்கொடுத்த கிராமம் துறைநீலாவணை ஆகும். இந்தமண்ணில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு வெற்றியடைந்துள்ளது. துறைநீலாவணை கிராமத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உள்ளுராட்சி தேர்தலில் உத்வேகத்துடன் களமிறங்கிய மாற்றுக் கட்சிகளான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்ணணி, ஐக்கிய தேசியகட்சி போன்றவற்றை துறைநீலாவணை மண்ணில் உள்ள வீரத்தமிழர்களால் நிராகரித்து விட்டார்கள். இத்தேர்தல் மாற்றுக்கட்சியினருக்கு நல்ல படிப்பினைக் கொடுத்திருக்கின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களினது உரிமையினை வென்றெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு துறைநீலாவணை பொதுமக்களும் முழு ஆதரவையும் வழங்கியுள்ளார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்றதேர்தல்களில் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இன்று அந்நிலை மாறி ஜனநாயகமான தேர்தல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தத் தேர்தலை துறைநீலாவணை மக்கள் மட்டுமல்ல வடகிழக்கு தமிழ் மக்களும் சரியாகப் பயன்படுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்துள்ளார்கள். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 14425 வாக்குகளை பெற்று 10 உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளார்கள். என்னை வெற்றிபெற உழைத்தவர்களுக்கும், வடகிழக்கில் தமிழ்தேசியக்கூட்டமைப்பை வெற்றியடையச் செய்தவர்களுக்கும் நன்றிகளை எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் இருக்கின்றனர் என்ற செய்தியை உள்ளுராட்சி தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.
துறைநீலாவணைக் கிராமமானது கடந்த கால தேர்தல்களில் இந்த மண்ணில் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக எந்த அரசியல் தலைமைகளையும் அனுப்பவும் இல்லை. அத்த நிலையை யாரும் எமது மக்களுக்கு ஏற்படுத்தித் தரவும் இல்லை எமது மக்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஏனையவர்களுக்கு வாக்களித்தே வெற்றியடையச்செய்து வந்தமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்குத்தெரியும். இன்றுதான் அதற்கான களம் ஏற்படுத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளோம். துறைநீலாவணை பொதுமக்கள் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் இனவிடுதலையின் பயணத்தில் இணைந்திருக்கின்றார்கள்.
அன்று துறைநீலாவணை சேனைக்குடியிருப்பு நற்பட்டிமுனை கிராமங்கள் இணைந்து கரவாகு வடக்கு என இருந்தது. பின்பு கல்லாறு -4 வட்டாரமாகவும் துறைநீலாவணை 4 வட்டாரமாகவும் இருந்ததில் எமது கிராமத்தவர்கள் தலைவராக இருந்தனர். அதன் பின்புதான் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை உருவாக்கப்பட்டது.
இப்பிரதேச சபை மூலம் எமது கிராமத்திற்கு சரியான அபிவிருத்தி நடைபெறமால் இருக்கின்றது. கடந்த தேர்தல் விகிதாசார முறைப்படி நடைபெற்றது அதில் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
இன்று அவ்வாறான சிக்கல் எதுவும் இத்தேர்தலில் ஏற்படவில்லை.
சட்டம் கடுமையாக்கப்பட்டு நேர்மையான தேர்தல் இடம்பெற்றுள்ளது. சட்டத்தை மதித்து எமது தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வெற்றியடைந்துள்ளது.
முன்பு நடைபெற்று முடிந்த பாராளுமன்றம் மாகாணசபைத் தேர்தல்களில் 60 வீதத்திற்குக் குறைவான மக்களே வாக்களித்து இருந்தார்கள். ஆனால் இத்தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிப்பில் 60 வீதத்தை கடந்திருக்கின்றார்கள். தமிழ்மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும், பலமாகவும் இருக்கும்போதுதான் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வுகளை எட்டமுடியும். எமது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இராஜதந்திர ரீதியில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பெரும் முயற்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றார். இவ்வாறான நிலையில்தான் தமிழ் மக்கள் ஒற்றுமையாகவும், பலமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் எண்ணங்களை நிறைவேற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment