கிரான் மிருக வைத்தியர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிக் கிராமத்தில் அலைந்து திரியும் சுமார் 320 இற்கு மேற்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ரேபிஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய்க் கிருமிக்கெதிரான தடுப்பூசிகள் இடப்பட்டதாக பிரதேச மிருக வைத்தியர் அருணி மதுபாஷினி உடஹவத்த தெரிவித்தார்.
திங்கட்கிழமை 05.06.2018 ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இடும் பணிகளில் முதல் நாளன்று கிராமத்தின் மூன்று இடங்களில் தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்கள், பூனைகள் என்பன பிடிக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக சுமார் 305 நாய்களுக்கும் 15 பூனைகளுக்கும் இந்தத் தடுப்பூசிகள் இடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளிக்கிராமத்தில் கடந்த வாரம் ரேபீஸ் எனப்படும் நீர்வெறுப்பு நோய்க் கிருமித் தொற்றுக்குள்ளாகி அலைந்து திரிந்த விசர் நாய், கிராமத்திலுள்ள ஆட்களுக்கும் நாய்களுக்கும் கடித்ததைத் தொடர்ந்து அங்கு நாய் கடித்த ஒரு மூதாட்டி மரணமானதுடன் சிறுமியொருத்தி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து விசர்நோயுடன் அலைந்து திரிந்த குறித்த தெரு நாய் கொல்லப்பட்டு அதன் தலைப்பகுதி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அது ரேபிஸ் கிருமி தொற்றிய நாயென வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்தி அறிக்கை அனுப்பியிருந்தனர்.
அதன் பின்னரே, சந்திவெளிப் பகுதியில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு நீர்வெறுப்பு நோய்க்கு எதிரான (யுவெi சுயடிநைள) தடுப்பூசி இடும் பணிகள் உடனடியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுமார் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருக்கக் கூடிய விலங்குகளில் தொற்றும் நீர்வெறுப்பு நோய்க் கிருமிக்கு எதிரான இந்த தடுப்பு ஊசியை வீடுகளில் நாய் மற்றும் பூனைகளை வளர்ப்போர் தமது செல்லப் பிராணிகளுக்கு ஏற்றிக் கொள்ள வேண்டும் என மிருக வைத்தியர் அருணி மதுபாஷினி மேலும் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை தமது கிரான் பிரதேச மிருக வைத்தியப் பிரிவிலுள்ள ஏனைய கிராமங்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆர். ரவிச்சந்திரன் நீர் வெறுப்பு நோய்க்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. ரவிச்சந்திரன், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலகிருஷ்ணன் ரமேஷ்குமார், மிருக வளர்ப்பு அபிவிருத்திப் போதனாசிரியர் என். மனோகரன் உட்பட இன்னும் பல சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
0 Comments:
Post a Comment