நாட்டில் அரசியல் ரீதியான மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருக்கின்ற இந்த வேளையில் சமாதானத்திற்காகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற ஆர்வலர்களுக்கு இந்த ஆண்டு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கப்போகின்றது என தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் விஜயநாதன் துஷாந்த்ரா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களின் மாதாந்த செயலமர்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதி;யில் திங்கட்கிழமை 22.01.2018 இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வமதப் பேரவை உறுப்பினர்கள் ஆற்றக்கூடிய இன நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் அதன் காரணமாக ஏற்படும் சவால்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்,
தொடர்ந்த கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலும் இதற்கடுத்தபடியாக வரப்போகின்ற மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தலும் சமாதான செயற்பாட்டுக்கு எவ்வாறு சாதமாக இருக்கப்போகின்றன என்பது பற்றியும் கரிசனை உள்ளது.
இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் இனவாத சிந்தனைகளை விதைத்தே ஆட்சி கைப்பற்றப்படும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஒரு வருடத்திற்குள் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலே இதற்குச் சிறந்த சான்று.
அந்த இனவாத நோக்கங்களிலேதான் அதிகமதிகம் அரசியல் முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பல நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான கருவியாக இனவாதம் பயன்படுத்தப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெறக் கூடிய அரசியல் மாற்றங்களை தேசிய சமாதானப் பேரவை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.
இந்தத் தேர்தலும் ஒரு முக்கியமான காலகட்டத்தின் அறிகுறியாக இருக்கும்.
எவ்வாறேனும், சமாதான செயற்பாட்டாளரகள் பல தரப்பினரால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். சமூக வலைத்தளங்களுக்கூடாகவும் முகநூல்களுக்கூடாகவும் சமாதான செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றார்கள்.
ஒரு சமூக வலைத் தளத்தில் சமாதான ஆர்வலர்களைப் பற்றி “நடுநிலை நக்கிகள்” என ஏழனமாகவும் கீழ்த்தரமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பக்கச் சார்பின்றிச் செயற்படுபவர்களைச் சோர்வடையச் செய்தவற்காக சம காலத்தில் இத்தகைய அநாகரிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனாலும் இத்தகைய கீழ்த்தரமான அறிவீனமான விமர்சனங்கள் சமாதானத்திற்காக தங்களை அர்ப்பணித்துள்ள ஆர்வலர்களான தியாகிகளை ஒருபோதும் சோர்வடையச் செய்து விடாது என்பது உறுதி. சோர்வடைதலுக்குப் பதிலாக சமாதான செயற்பாடுகளில் அதீதி உத்வேகத்தையே அளிக்கும் என்பது எமது திடமான நம்பிக்கை.
சமாதான செய்ற்பாட்டாளர்களுக்குச் சவாலான இவ்வாண்டில் சமாதான ஆர்வலர்களின் பங்களிப்பு மிக முக்கியம்.
நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இன்னும் இன்னும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியிருக்கின்றது.” என்றார்.
தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த சயமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகவாழ்வும் இன ஐக்கியத்திற்குமான சர்வமத ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment