மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளி – மண்டூர் துறைக்கு பாலம் அமைப்பதற்கு கடந்த வருட இறுதிப் பகுதியில் அமைச்சர்களால் அடிக்கல் நடப்பட்டது. இந்நிலையில் இப்பாலம் அமைக்கும் செயற்பாடு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு அலுவலகத்தின் கீழ் நடைபெறுகின்றதா, அல்லது வேறு எந்த செயற்றிட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது, அடிக்கல் நடப்பட்டு 2 மாதங்கள் கடந்துள்ள இந்நிலையில் இப்பாலத்தின் புணரமைப்பு வேலைகள் இதுவரையில் ஏன் ஆரம்பிக்கப்படவில்லை, என பொதுமக்கள் எம்மிடம் வந்து கேள்வி கேட்கின்றார்கள். இதனை ஊடகங்கள்தான் கண்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இளையதம்பி தவஞானசூரியம் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்….
குருமண்வெளி – மண்டூர் ஓடத்துறைக்கு பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டதைத் தொடர்ந்து இன்றுவரையில் அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை. இது ஏமாற்று நடவடிக்கையா, அல்லது உண்மையான அபிவிருத்தித்திட்டம்தானா என பொதுமக்கள் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றார்கள். இதன் உண்மைத்தன்மையினை ஊடகங்களைப் பெற்றுத்தர வேண்டுவதோடு, இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும், ஊடகங்கள் முன்வர வேண்டும். என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியையும், எழுவாங்கரைப் பகுதியையும் இணைக்கும் மற்றுமொரு ஓடத்துறையாகக் காணப்படுவது மண்டூர் - குருமண்வெளி படகு மூலமான போக்குவரத்தாகும். இலங்கையின் இரண்டாவது மிக நீளமான நதியாகக் காணப்படும் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து இப்படகுப் போக்குவரத்து மார்க்கம் மிக நீண்டகாலமாக இருந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் 1400 மில்லின் ரூபா, செலவில் இவ்வோடத்துறைக்கு பாலம் அமைப்பதற்கான கடந்த 14.10.2017 அன்று பிற்பகல் அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது.
இதன்போது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சிரேஸ்ட சட்டத்தரணி லக்ஸமன் கிரியல்ல, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், அலிசாகிர் மௌலானா, முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
இது இவ்வாறு இருக்க கிழக்கு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வை.தர்மரெத்தினத்திடம் இவ்விடையம் தொடர்பில் திங்கட் கிழமை (22) தொடர்பு கொண்டு கேட்டபோது……
மண்டூர் - குருமண்வெளி ஓடத்துறைக்கு பாலம் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் உடனடியாக அதனை ஆரம்பிக்க முடியாது, பிரதமரின் கீழ் உள்ள அமைச்சின் கீழ் திட்ட முன்மொழிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக இன்னும் 6 மாதத்திற்குள் இதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்படும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment