வடக்கு கிழக்கில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியுடன் இணைந்துள்ளமையானது தமிழர் பலத்தை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாசகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
ஞாயிற்றக்கிழமை 28.01.2018 மட்டக்களப்பு அரசடி 10ஆம் வட்டார ஆதரவாளர்கள் மத்தியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றி அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் அற்ப சொற்ப சலுகைகளுக்காக மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்ததால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பின் மூலம் பெறுவது என்பது இயலாமல் போகும் அபாயமுள்ளது.
ஆகையினால், நடப்பு நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் அறிவாளிகளான ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமிழ் சமூக பலத்தை வெளிப்படுத்த வேண்டும்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தொடர்ச்சியான ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்த சிலர் சிறிய காரணங்களை முன்வைத்து பிரிந்து சென்றமையானது வேதனையளிக்கின்றது.
அவ்வாறிருந்தும் தேர்தலுக்கு முன்பதாக அவர்களும் எம்மோடு இணைந்து செயல்படவேண்டும் என அறைகூவல் விடுக்கின்றோம்.
இத்தகைய செயற்பாடினால் எமது தேசியம் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதோடு மாறாக எமது பகுதிக்குள் மாற்றுக் கட்சியினர் புகுந்து அற்ப சொற்ப சலுகைகளை எமது மக்களுக்கு வழங்குவதாக கூறியும் பாசாங்கு செய்தும் எம் மக்களின் பெறுமதிமிக்க வாக்குகளை சூறையாடுவதைத் தடுக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை தற்போது அதற்கான களம் கிடைக்கப்பபெற்றுள்ளது. மக்கள் தற்போது அரசியல் அறிவுள்ளவர்களாக மாறியுள்ளார்கள் அவர்கள் தேர்தலின்போது சரியானவர்களைத் தெரிவு செய்வார்கள்.
மக்களின் சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து மற்றும் சுத்தமான சுற்றாடல் ஆகிய அடிப்படைப் வசதிகளை பெறுவதற்காக உள்ளுராட்சி மன்றங்களை நன்கு பயன்படுத்த வேண்டும். அதைப் பெறுவதற்கு குறித்த சபைகளுக்கு அவற்றை செயல்படுத்த துறைசார்ந்தவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு மேலும் வருமானங்களை ஈட்டக்கூடிய செயற்திட்டங்களை முன்மொழிந்து அமுல்படுத்த வேண்டும். அபிவிருத்திக்கு முற்றிலும் பெரும்பான்மைக் கட்சியை எதிர்பார்க்காமல் சுயமாக எமது வளங்களைப் பயன்படுத்தி வருமானமீட்ட முயற்சிக்க வேண்டும்.
பெரும்பான்மைக் கட்சிகளால் மட்டும்தான் அபிவிருத்தியைச் செய்ய முடியும் என்கின்ற மாயையை நாம் தகர்த்தெறிந்து எமது கட்சியாலும் செய்ய முடியும் என்பதை நிருபித்துக் காட்ட வேண்டும் இதனால் எமது பிரதேசம் பாரிய அபிவிருத்தியை அடையும்” என்றார்.
0 Comments:
Post a Comment