மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த டிசெம்பெர் மாதம் மாத்திரம் 117 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் செவ்வாயன்று (02.01.2018) தெரிவித்தார்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் தலைதூக்கியுள்ள டெங்கு நோய் அச்சுறுத்தல் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,
டிசெம்பெர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை டெங்கு வைரஸ் தொற்றுக்குள்ளான 117 பேரில் 56 பேர் சிறுவர்களும் குழந்தைகளுமாகும். இவர்கள் வைத்தியசாலையில் முழுநேரக் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற்று சுக தேகிகளாக வெளியேறியுள்ளார்கள்.
இதேவேளை கடந்த டிசெம்பெர் மாதம் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 6 மற்றும் 7 வயதுடைய சிறுமிகள் இருவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமயம் கடந்த வாரம் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நுளம்புகளையும் நுளம்பு பெருகும் இடங்களையும் இல்லாதொழிப்பதே இதற்குச் சரியான தீர்வாகும்.
நமது வீடு, வீட்டுச் சூழல், சுற்றயல், மற்றும் பொது இடங்களை ஒவ்வொருவரும் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி சுத்தமாகப் பேணுவார்களாயின் டெங்கு நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்ற முடியும்.
மேலும் அரச நிருவாக இயந்திரத்தில் உள்ள சகலரும் டெங்கு ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டமிடப்பட்ட நகர மயமாக்கலை உள்ளுராட்சி நிறுவனங்கள் மேற்கொண்டு கட்டிடங்களையும் அவற்றைச் சூழவுள்ள இடங்களையும் கண்காணித்து டெங்கு நுளம்பு பல்கிப் பெருகுவதைத் தடுப்பதற்கும் உரிய உள்ளுராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை அமுல்படுத்த வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment