லயன் வீடுகளில் வாழும் மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வண்ணம் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் படைக்கப்பட்ட ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் புதன்கிழமை 20.12.2017 இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
மலையகம் நாவலப்பிட்டியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவி ராஜேந்திரன் யுவராணியால் வரையப்பட்ட இந்த ஓவியங்களை வெளிநாட்டுப் பல்கலைக் கழக பேராசிரியை லில்லி உட்பட உள்நாட்டு வெளிநாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பொது மக்களும் பார்வையிட்டனர்.
தனது சொந்த மலையக சமூகத்தின் பின்தங்கிய வாழ்க்கைப் போராட்ட நிலைமையினை வெளிப்படுத்தும் வகையில் சமூக அக்கறையுள்ளவளாக தனது படைப்பை ஓவியமாக வெளிப்படுத்தியதாக யுவராணி தெரிவித்தார்.
ஒரு தேசிய இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் தூண்களாக இருப்பவை நிலமும் பொருளாதாரமும் ஆகும். அந்தவகையில் இதுவரைக்காலமும் நில உரிமையற்றவர்களாக வாழும் நம்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் காணப்படும் இனமே மலையகத்தமிழ்ச் சமூகமாகும்.
ஆனால் அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமின்றி சுமார் 150 ஆண்டுகள் கடந்தும் மாறாத காலனித்துவ சின்னமாய் விளங்கும் லயன் வீடுகளில் வாழும் சிக்கலான என் சமூகத்தின் தேவைப்பாட்டினை நான் புரிந்துக் கொண்டு இவற்றை வெளியுலகுக்குச் சமர்ப்பித்துள்ளேன்.
தேயிலை தேசத்தின் உற்ப்பத்தியாளர்களான ஆண்களினதும் பெண்களினதும் அடையாளமான தேயிலைச் சாயத்தினை பயன்ப்படுத்தி எனது படைப்புக்களை “கருஞ்சாயங்கள்” (The
Dark Dye) எனும் தொனிப்பொருளில் காண்பியக்கலையைச் காட்சியாகச் சமர்ப்பிக்கின்றேன்” என்றும் அவர் கூறினார்.
















0 Comments:
Post a Comment