மட்டக்களப்பின் கிராமப்புற முஸ்லிம் பிரதேசங்களில் இளவயதுத் திருமணமும் இளவயதுக் கர்பப்ந்தரிப்புகளும் அதிகமாக உள்ளதென ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.
ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் சனிக்கிழமை 16.12.2017 இடம்பெற்ற இலவச வைத்திய முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்ற கர்ப்பிணித் தாய்மார், பெண்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
தொடர்ந்து அங்கு சகாதார நலன்கள் பற்றி விளக்கமளித்த அவர்,
கிழக்கு மாகாணத்தில் 12.5 என்ற வீதத்தில் இளவயதுத் திருமணம் அதிகமாகி இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமப் புறங்களில் இளவயதுத் திருமண வீதம் அதிகமாகவுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
19 வயதிற்குள் கர்ப்பம் தரித்தலே இளவயதுத் திருமணம் எனப்படுகின்றது.
இந்த இள வயதெல்லையில் திருமணம் செய்தல் என்பது தாய் சேய் மற்றும் சமூக ஆரோக்கியத்திற்குக் கேடானது.
உடலும் உள்ளமும் முதிர்ச்சியடையாத ஒடியாடி விளையாடித் திரிந்து சந்தோசமாக கல்வி கற்கும் கட்டிளமைக் கால கட்டத்தில் திருமணம் செய்வித்து குடும்பப் பொறுப்பையும் பொருளாதாரச் சுமையையும் சிறுமிகள் மீது சுமத்தினால் அது தாங்க முடியாது.
ஒரு பெண்ணின் ஆரோக்கிய நிலையை எடுத்துக் காட்டுவது உடற் திணிவுச் சுட்டி. அது 18.5 என்ற அளவில் இருக்க வேண்டும். அந்த அளவில் இருந்து அது குறைவடைந்தால் பெண்ணின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கொள்ள முடியும்.
இளவயதுத் திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகள் அனைவருக்கும் உடற் திணிவுச் சுட்டி என்பது 18.5 என்ற அளவை விடக் குறைவானதாகவே இருக்கின்றது.
இளவயதுத் திருமணத்தின் மூலம் குறை மாதத்தில் நிறை குறைந்த பிள்ளைகள் பிறக்கும். அதனால் அனீமியா எனப்படுகின்ற குருதிச் சோகை நோய் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும்.
பெண்ணுக்கு ஆரோக்கியமான உணவுகள் தேவை, அதேவேளை, அவளது கருவில் வளர்கின்ற வயிற்றுக் குழந்தைக்கும் ஆரோக்கியமான தேவை.
பிறக்கும் சாதாரணமான ஒரு குழந்தையின் நிறை 2.5 கிலோ கிராம் ஆகும். ஆனால் இளவயதுச் சிறுமிகள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஒருபோதும் இந்த நிறையை அடைவதில்லை.
இதனால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்புக்கள். அதிகம்.
சுவாசப்பை, இருதயம், மூளை விருத்தியடையாமை, மூளையில் இரத்தம் கசிதல் என்பன ஏற்படும்.
மேலும், ருபெல்லா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாமல் இளவயதில் திருமணம் செய்து கொண்ட ஒரு சிறுமி கர்ப்பம் தரித்தால் சிசு ஊனமடையும். சிசுவுக்கு மரணம் கூட ஏற்படலாம்.
இளவதில் வறுமை, கல்வியறிவின்மை, தாய்மார் சிறுமிகளை பராமரிப்பின்றி விட்டு விட்டு வெளிநாடு செல்லுதல். வீட்டில் சிறுமிகளுக்குப் பாதுகாப்பின்மை, ஒரு பெற்றோர் தாயோ தந்தையோ மட்டும் உள்ள பிள்ளைகள், கவனிப்பாரற்ற அரவணைப்பற்ற குடும்பத்திலுள்ள சிறுமிகள் போன்றோரே அதிகளவில் இளவயதுத் திருமணத்திற்கு ஆளாகின்றனர்.
திருமணமானவுடன் குடும்பத்தினராலும் உறவினர்களாலும் குழந்தை பெற்றுக் கொள்ள நிர்ப்பந்திப்பதும் ஆரோக்கியமற்ற இளவயதுக் கருத்தரித்தலை ஊக்குவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.” என்றார்.
0 Comments:
Post a Comment